காரைக்கால்

காரைக்கால் புயல் பாதிப்புக்கு ஆதாரம் கோருவதா? துணை நிலை ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம்

DIN

காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை இதுவரை பார்வையிட வராமல், ராஜ்பவனில் இருந்துகொண்டு புயல் பாதிப்புக்கு ஆதாரம் இருக்கிறதா என கோருவதா என, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கஜா புயல்  சூறைக்காற்றினால் காரைக்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்ததோடு, கடலோரத்தில் நிறுத்தியிருந்த படகுகள் பல சேதமடைந்தன. மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தமிழ்நாடு, புதுச்சேரிக்கான மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய்தத் காரைக்காலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாநில வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸாருடன் சென்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சஞ்சய்தத் கூறியது: 
காரைக்காலில் திருநள்ளாறு உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், கடலோரத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்துப் பேசினோம். பாதிக்கப்பட்ட படகுகள், வீடுகளைப் பார்வையிட்டோம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸார் புயல் பாதித்த மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளதன் அடிப்படையில், காங்கிரஸார் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும், பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரணம் தரவும் மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆளும் அரசாக இருப்பதால், கட்சிக்கும், ஆட்சிக்கும் பொறுப்புகள் அதிகம்.
புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்துள்ளது. எனினும் பேரிடர் என்கிறபோது இது நமது கையில் இல்லை. இதனை எதிர்கொண்டே தீரவேண்டியுள்ளது. காரைக்காலில் மக்களோடு மக்களாக இணைந்து அமைச்சர் கமலக்கண்ணன் பணியாற்றிவருகிறார்.
ஆனால் எதிர்பாராவிதமாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர், புயல் பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் செயல்படுகிறார். சமூக வலைதளத்தில் அவர், காரைக்கால் புயலால் பாதித்துள்ளதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது  என வினவியுள்ளார். காரைக்கால் வந்து மக்களையும், பல்வேறு இடங்களையும் பார்த்தாலே தெரிந்துவிடும். ராஜ்பவனில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, அவதிப்படும் மக்களை அலட்சியப்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. புயல் பாதிப்புகளை இதுவரை அவர் காரைக்கால் வந்து பார்க்கவில்லை.
இதுவரை மத்திய அமைச்சர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவரவில்லை. மத்திய அரசு சார்பில் நிதியுதவி செய்வதாகவும் கூறவில்லை. மத்திய அரசு எந்தவொரு முயற்சியிலும் இதுவரை ஈடுபடவில்லை. துணை நிலை ஆளுநரும் புதுச்சேரி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.  அரசியலமைப்புக்கு எதிராக துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன.
புதுச்சேரி ராஜ்பவன் என்பது பாஜகவின் தலைமையிடமாக இருக்கிறது. மாநில அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்கவேண்டிய ஆளுநர், மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் பாலமாக இருக்கிறார்.
மத்தியில் மன்மோகன்சிங் அரசு இருந்தபோது, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், பேரிடரின்போது தாராளமாக நிதியுதவியை செய்தது. ஆனால், மோடி அரசு அவ்வாறு புதுச்சேரி பக்கம் நிற்கவில்லை. ஆனால், மக்கள் பக்கம் காங்கிரஸ் நிற்கிறது, காங்கிஸை மக்கள் நம்புகின்றனர் என்றார் அவர். பேட்டியின்போது அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT