ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கைசிக மஹாத்மிய உத்ஸவம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கைசிக மஹாத்மிய உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கைசிக மஹாத்மிய உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று  தரிசனம் செய்தனர்.
திருக்குறுங்குடி என்கிற திவ்யதேசத்தில் அழகிய நம்பிராயர் முன், சிறந்த பக்தரான நம்பாடுவான் கைசிகமாகிய பண் இசைத்து, இசையின் பலனாக சோமசர்மாவின் சாபத்தை போக்கினார். இந்த நிகழ்வு நடந்ததாக வராஹப்பெருமாள் பூமிப் பிராட்டிக்கு உபதேசித்த ஸ்ரீ வராஹப்புராணத்தில் உள்ளதை விளக்கும் வகையில், ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோயில்களில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் துவாதசி நாளில் கைசிக மஹாத்மிய உத்ஸவம் நடத்தப்படுகிறது.
இதேபோன்ற உத்ஸவம் காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கியது. இரவு 7 மணியளவில் உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாளுக்கு புது வஸ்திரம் சாற்றப்பட்டு, பிராகார உலா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களிடையே உத்ஸவத்தின் சிறப்பு குறித்து ஸ்ரீ உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள் பேசி, கைசிக புராணம் படித்தார். புராணத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் நிறைவிலும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
அப்போது சுவாமி முன் பெரிய கண்ணாடி நிறுத்தப்பட்டு, பெருமாள் கண்ணாடி சேவையையும் பக்தர்கள் தரிசித்தனர்.  நிறைவில் மூலவருக்கும், உத்ஸவருக்கும் சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.  நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர்,  ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com