பிறமொழி பேசுவோரையும் மதிக்கும் பழக்கம் இருக்கவேண்டும்: சார்பு ஆட்சியர் 

பிற மொழி பேசுவோரையும் மதிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா. 

பிற மொழி பேசுவோரையும் மதிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா. 
காரைக்காலில் புதன்கிழமை தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவையொட்டி, கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பண்மொழி இணக்க நாள் விழாவில் மேலும் அவர் பேசியது: மொழி என்பது உயிரினும் மேலானது. ஒவ்வொருவருக்கும் தாய் மொழி மிகவும் முக்கியமானது. மொழி நமது பண்பாட்டை பேணிக்காக்கும். இந்திய நாடு ஒரு மொழி பேசுவோரை கொண்டிருக்கவில்லை. 
பல மொழி பேசும் இந்த நாட்டில், அனைத்து மொழியினரையும் நாம் மதித்துப் பழக கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களது மனம் புண்படும்படி நாம் நடந்துகொள்ளக் கூடாது. காரைக்காலிலேயே ஜிப்மர், என்.ஐ.டி. உள்ளிட்ட பிற மாநிலத்தின் மாணவர்கள் பயிலும் கல்லூரிகள் உள்ளன. பண்மொழி பேசுவோரிடையே நமது பழக்கம் இருக்கும்பட்சத்தில், பரந்த அறிவை நாம் பெறமுடியும். குறிப்பாக, இதை மாணவர் சமுதாயம்  மனதில்கொண்டு நடக்க வேண்டும். இதையே இந்நாளில் அனைவரும் உறுதிமொழியாக ஏற்று நடக்கவேண்டும். எந்தவொரு மொழியும் அழியும் நிலைக்கு செல்லக்கூடாது. அதற்கு மொழியின் மீதான ஆழமான சிந்தனை இருப்பதே நலனை சேர்க்கும் என்றார்.
விழாவில், மேல்நிலைப் பள்ளி துணை இயக்குநர் கேசவ் பேசியது:
தாய்மொழியும் மற்றும் ஆங்கிலத்தையும் மாணவர்கள் முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும். உயர்கல்விக்கு செல்வதற்கு ஆங்கிலம் மிக முக்கியமாக கருதப்படுகிறது என்றார். 
மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் பேசியது: இந்திய நாட்டில் உள்ளோர் பல்வேறு மொழிகளால் பிரிந்திருந்தாலும், இந்தியன் என்ற ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றார். 
ஜிப்மர் உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களது மாநிலத்தின் பெருமைகள், மாநில மக்கள் பேசும் மொழியின் சிறப்பு குறித்து பேசினர். முன்னதாக, முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி வரவேற்றார். கல்வித் துறை வட்ட துணை ஆய்வாளர்கள் கார்த்திகேசன், சௌந்தரராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com