சத்தான இணை உணவு தயாரிப்பு கருத்தரங்கம்

கர்ப்பிணி, குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் சத்தான இணை உணவு எடுத்துக்கொள்ளும் வகையில், இதன் தயாரிப்பு

கர்ப்பிணி, குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் சத்தான இணை உணவு எடுத்துக்கொள்ளும் வகையில், இதன் தயாரிப்பு முறைகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், பிரதம மந்திரியின் ராஷ்ட்ரிய போஷான் அபியான் என்ற திட்டத்தின்கீழ், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காரைக்காலில் அண்மையில் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளளர்கள், தன்னார்வலர்கள் பேரணி நடத்தினர். தொடர் நிகழ்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாக கூட்ட அரங்கில் அங்கன்வாடி ஊழியர்கள், தாய்மார்கள் பங்கேற்ற கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர் பி. சத்யா  தலைமை வகித்தார். திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை துணை இயக்குநர் பாலாஜி கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார்.
ராசிபுரத்தித்திலிருந்து ராசி நேட்சுரல் ஃபுட்ஸ் நிறுவன அலுவலர் விமலன் கலந்துகொண்டு, நிறுவனத்தில்  தயாரிக்கப்படும் சத்தான மாவு குறித்தும், இந்த மாவு மூலம் இணை உணவாக முறுக்கு, புட்டு, கொழுக்கட்டை, தோசை, ரவா லட்டு, மாவு உருண்டை, மாவு கஞ்சி, அடை பணியாரம், கிச்சடி, போண்டா (இனிப்பு, காரம்), பக்கோடா உள்ளிட்ட 14 வகைகள் உணவுப் பொருள்கள் தயாரிக்க முடியும் என்பது குறித்தும், நிறுவனம் தயாரிக்கும் மாவில் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கான மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சத்துகள் அடங்கிருக்கிறது. வழக்கமான உணவுடன், இந்த மாவு மற்றும் இணை பொருள்களை கலந்து சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் ஏற்படும். அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே நிறுவனம் இணை உணவு தயாரிப்புக்கான மூலப் பொருள்களை தயாரித்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர். 
கருத்தரங்கில், மேற்கண்ட இணை உணவு வகைகள் தயாரிப்பு குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com