வாய்க்கால், கழிவுநீர் வடிகால்களில் குப்பைகளை கொட்டக் கூடாது: வணிக நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

வாய்க்கால், கழிவுநீர் வடிகால்களில் குப்பைகளை வணிக நிறுவனத்தினர் கொட்டக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை

வாய்க்கால், கழிவுநீர் வடிகால்களில் குப்பைகளை வணிக நிறுவனத்தினர் கொட்டக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட  ஆட்சியர் ஆர். கேசவன் எச்சரிக்கை விடுத்தார். 
பருவ மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், வாய்க்கால்களை தூர்வாரவேண்டும் என பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். நகராட்சி சார்பில், முதல்கட்டமாக நகர்ப்புற வாய்க்கால்களில் வெங்காயத் தாமரைச் செடிகள் அகற்றும் பணி அண்மையில் தொடங்கியது. இப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் இருந்து வருகிறது. கழிவுநீர் வடிகால்களில் தண்ணீர் தேக்கத்தால் உருவாகும் கொசு, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நலவழித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், காரைக்கால் நகரில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், ராஜாத்தி நகர், காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த வடிகால் வாய்க்காலில், அருகிலிருந்த பழக்கடைகள், பானிபூரி விற்பனை கடை உள்ளிட்ட கடைகளில் பயன்படுத்தப்பட்ட அட்டைப் பெட்டிகள், தெர்மாகோல் அட்டைகள் உள்ளிட்டவை கொட்டி வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து உடனடியாக அவற்றை அகற்றுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், கடைக்காரர்களை சந்தித்து தூய்மையாக பராமரிக்கவும், வடிகால்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும் குப்பைகளை இவ்வாறு கொட்டாமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட  ஆட்சியர் குப்பைகள் கொட்டுவது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்தார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து, நாள்தோறும் குப்பை சேகரிப்பாளர்கள் வருகின்றனரா, தரம் பிரித்து குப்பைகளை வழங்குகிறீர்களா எனக் கேட்டறிந்தார். 
காமராஜர் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அருகே உள்ள இடத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அவை வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகள் என தெரிந்த நிலையில், உடனடியாக குப்பைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்குமாறு வணிக வளாக பயன்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினார். வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சுத்தப்படுத்திவிடுவதாக சம்பந்தப்பட்ட வணிக வளாக பயன்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அங்கிருந்த திருமண மண்டபம் பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகாலில் பிளாஸ்டிக் புட்டிகள் உள்ளிட்ட பொருள்கள் கொட்டப்பட்டிருந்த நிலையில் மண்டப நிர்வாகத்தினரே 3 நாள்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குநர் (பொ) டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com