காரைக்காலுக்கு செப்டம்பர் மாதத்துக்கான காவிரி நீரை பெற நடவடிக்கை: ஆட்சியர் 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காரைக்காலுக்கு செப்டம்பர் மாதத்துக்கான காவிரி நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காரைக்காலுக்கு செப்டம்பர் மாதத்துக்கான காவிரி நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம் சனிக்கிழமை காரைக்கால் வந்தார். மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை சந்தித்து, காரைக்காலுக்கு தமிழகப் பகுதியிலிருந்து வரும் காவிரி நீர் குறித்தும், மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைக்குள் காவிரி நீர் வரும் ரெகுலேட்டர்களை (ஒழுங்கிகள்) ஆய்வு செய்ய ஆட்சியர் ஆர். கேசவன், நெடுங்காடு, அகரமாங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றார். அவருடன் தலைமைப் பொறியாளர் மற்றும் காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ. ராஜசேகரன் உள்ளிட்ட பொறியாளர் குழுவினரும் சென்றனர்.
காவிரி நீர் காரைக்காலுக்குள் நுழையும் பகுதியில் ஆய்வு செய்த அக்குழுவினர், எந்த அளவுக்கு வந்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டனர். இந்த ஆய்வு குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் 
கூறியது :
பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் புதுவைக்கான 7 டிஎம்சி காவிரி நீர் வழங்கலை உச்சநீதிமன்றம் உறுதியளித்தது. எந்தெந்த மாதத்தில் காவிரி நீர் காரைக்காலுக்கு எவ்வளவு அளவீட்டுடன் தரவேண்டும் என்பதும் தெளிவாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தந்த மாதத்தில் நமது உரிமையின்படி காவிரி நீரைப் பெறுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. 
தற்போது சம்பா பணிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழக அரசு அதிகாரிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தற்போது காரைக்கால் பகுதியில் நாட்டாறு, வாஞ்சியாற்றில் தண்ணீர் வந்துள்ளது. மேலும் நூலாறு, நண்டலாற்றில் தண்ணீர் வரவேண்டியுள்ளது. இதுவரை 0.223 டிஎம்சி மட்டுமே  செப்டம்பருக்குரியது வந்துள்ளது. எஞ்சிய அளவு தண்ணீரைப் பெற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com