திருநள்ளாறு பிரம்ம தீர்த்தக் குளம் சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருநள்ளாறு பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணியை, தர்பாரண்யேசுவரர் கோயில்

திருநள்ளாறு பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணியை, தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்துக்குள் நிறைவு செய்யும்படி பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருநள்ளாறில் நளன் தீர்த்தக் குளம், சரஸ்வதி தீர்த்தக் குளம், பிரம்ம தீர்த்தக் குளம், எமன் தீர்த்தக் குளம் ஆகிய புனித தீர்த்தங்கள் உள்ளன. இதில், எமன் தீர்த்தக் குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.
தர்பாரண்யேசுவரர் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் பிரமோத்ஸவம் உள்ளிட்ட முக்கிய உத்ஸவங்களில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் கரைகள் பலமிழந்திருந்ததால், திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தினால் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பில் கரை கட்டுதல், தீர்த்த மண்டபம் கட்டுதல் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகளோடு சேர்ந்து தொடங்கப்பட்ட எமன் தீர்த்தக் குளம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், கோயில் நகரத் திட்டத்தினரால் தொடங்கப்பட்ட அகத்தீசுவரர் தீர்த்தக் குளமும், பிரம்ம தீர்த்தக் குளமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பிரம்ம தீர்த்தக் குளத்தின் பணிகள் மட்டும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பக்தர்கள் தரப்பிலும் புகார் கூறப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில், சார்புக் கோயில்களுக்கு குடமுழுக்குக்கான பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த 11-ஆம் தேதி கோயில் குடமுழுக்கும் நடந்து முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் பிரம்ம தீர்த்தக் குளத்தின் பணிகள் முழு வீச்சில் செய்து முடித்திருந்தால், அடுத்த ஓரிரு மாதத்தில் தொடங்கும் பிரமோத்ஸவத்தில் தீர்த்தவாரிக்கு குளம் தயார் நிலைக்கு வந்திருக்கும். ஆனால், தற்போதுதான் பணிகள் வேகமடைந்துள்ளதாகத் தெரிகிறது. நளன் தீர்த்தக் குளத்துக்கு அடுத்தப்படியாக பிரம்ம தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். தீர்த்தவாரிக்கும் இக்குளம் பெரிதும் பயன்படுகிறது என்பதால், பணிகளை முழு வீச்சில் செய்து முடிக்க பொதுப்பணித் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, திருநள்ளாறு கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கூறியது: பிரம்ம தீர்த்தக் குளத்தில் புனரமைப்புப் பணி, தீர்த்த மண்டபம் கட்டும்  பணியை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறை நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரும், கண்காணிப்புப் பொறியாளரும் இதன் மீது 
சிறப்பு கவனம்  செலுத்துவதாக கூறியுள்ளனர். எனவே, கோயில் பிரமோத்ஸவத்துக்குள் குளம் தயார் நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என நம்பிக்கைத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com