சுகாதாரக் கல்வி பட்டமேற்படிப்பு மையத்தில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

 காரைக்காலில் இயங்கும் சுகாதாரக் கல்வி பட்டமேற்படிப்பு மையத்தில் ஒரு வார கால நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது


 காரைக்காலில் இயங்கும் சுகாதாரக் கல்வி பட்டமேற்படிப்பு மையத்தில் ஒரு வார கால நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான, அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசினார். பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப் பணித் திட்டம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்விசார் ஒழுக்கம், சமூக அக்கறை, தேசப்பற்று மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. பொதுமக்களிடையே பல்வேறு நிலை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. சுகாதாரக் கல்வி கற்கும் மாணவர்கள், இந்த ஒரு வார கால முகாமின் மூலம் மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான பல்வேறு  விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் அவர்.
கல்வி நிறுவனத்தில் முதல்வர் (பொ) ஜெ. ஜெயபாரதி நாட்டு நலப் பணித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்களின் பங்கு குறித்தும் பேசினார். விழாவில் கல்வி நிலைய ஆசிரியர்கள் எம். அனிதா, ஏ. மரியா உள்ளிட்டோர் பேசினர்.  முன்னதாக  இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட  அலுவலர்  என். யோகமங்களம் வரவேற்றுப் பேசினார். நிறைவாக ஆசிரியர் என்.பி. ரூபேஷ் நன்றி கூறினார்.
மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமான கருத்துரை, கோயில் தூய்மைப் பணி, தலைமைத்துவப் பண்பு குறித்த கருத்துரை, சாலை தூய்மைப் பணி, ரத்த சோகை கண்டறியும் முகாம் நடத்துதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல், சர்க்கரை நோய் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து வீடு வீடாக விழிப்பணர்வு ஏற்படுத்துதல், தொலைந்துபோன தமிழர் மருத்துவம் என்ற தலைப்பில் ஹோமியோபதி மருத்துவரின் உரை, வீடுகள் தூய்மையை ஆய்வு செய்தல், பல்வேறு கலாசாரம் தொடர்பான போட்டிகள் உள்ளிட்டவை ஒரு வார காலத்தில் நடத்தப்படவுள்ளதாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com