கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

காணும் பொங்கலையொட்டி, ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரையில் திரண்டனர்.

காணும் பொங்கலையொட்டி, ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் பட்டம் விட்டும், பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றும் மகிழ்ந்தனர்.
தை மாதம் முதல்நாள் பொங்கல் வைத்தும், 2-ஆவது நாள் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்த்தியும், 3-ஆம் நாள் காணும் பொங்கலையொட்டி சிறுவர்கள், பெரியோர்கள் அந்தந்தப் பகுதியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் மகிழ்கின்றனர்.
மேலும் வீட்டில் தயாரித்து வந்த உணவுப் பண்டங்களுடன் குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டு, பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டும், பட்டம் விட்டும், உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியும் மகிழ்வது ஒவ்வொரு ஆண்டும் நடந்துவருகிறது.
அதன்படி, காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை பகல் 11 மணி முதல் காரைக்கால் கடற்கரைக்கு மக்கள் சென்றவண்ணம் இருந்தனர். கடற்கரையில் நின்று விளையாட்டுகளில் ஈடுபட்டும், சிறுவர்கள் பட்டம் விட்டும், குதூகலமாய் காணப்பட்டனர். கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.  கடற்கரைப் பகுதி ஆபத்து மிகுந்தது எனவும், ஏற்கெனவே பலர் உயிரிழந்திருப்பதாகவும் எச்சரிக்கைப் பலகை கடற்கரையில் வைக்கப்பட்டிருந்தன. இதை ஒலிபெருக்கி வாயிலாக சுட்டிக்காட்டி, கடற்கரையோரத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மகளிர் காவலர்கள் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தோறும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்தது. இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்டவை கடற்கரை சாலை முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. கடற்கரையில் பல சமூக அமைப்புகள் சார்பில் தமிழர் பண்பாட்டு விளையாட்டுப் போட்டிகள் பலவற்றை நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.  
மக்கள் அதிகமானோர் கடற்கரைக்கு வருவர் என்பதை கருத்தில்கொண்டு, ஏராளமான விரைவு உணவகங்கள், சிற்றுண்டி மையங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் விற்பனை உள்ளிட்டவை கடற்கரை சாலையோரத்திலும், கடற்கரை மணல் பரப்பிலும் நடைபெற்றன.தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கடந்த சில நாள்களாக அதிகமான பனிப்பொழி உள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் மாலை 6 மணி வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com