வைத்தீஸ்வரன்கோயிலில் கந்த சஷ்டி விழா

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில், செல்வமுத்துக்குமார சுவாமி சிவபெருமானிடம்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில், செல்வமுத்துக்குமார சுவாமி சிவபெருமானிடம் தங்கவேல் பெற்று சூரனை சம்ஹாரம் செய்யும் ஐதீக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி, செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) ஆகிய சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை கிருத்திகை மண்டபத்தில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நவரத்தினஆபரணங்கள் அலங்காரத்துடன் செல்வமுத்துக்குமாரசுவாமி கொடிமரம் அருகே எழுந்தருளினார்.
தொடர்ந்து, மூலவர் வைத்தியநாத சுவாமியிடமிருந்து சூரனை சம்ஹாரம் செய்ய தங்கவேல் வாங்கும் ஐதீக நிகழ்வு தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி முருகப்பெருமான் அம்பாளிடம் சக்தி பெற்று தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர், மேளதாளங்கள் முழங்க கோயில் பிராகாரத்தை வலம் வந்து, மேற்கு கோபுர வாசலில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து, சிவபெருமானிடம் பெற்ற வேலினைக் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிவாச்சாரியார்களால் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா', "அரோகரா' என கோஷமிட்டனர். 
விழாவில், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி டி.எஸ்.பி. சேகர் தலைமையில், காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள், பக்தர்கள் மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com