"கஜா'-வின் சூறையாட்டம்! 9 பேர் சாவு: 11 ஆயிரம் வீடுகள் சேதம்

நாகை - வேதாரண்யம் இடையே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டம்

நாகை - வேதாரண்யம் இடையே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டம் மிக கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளது. புயல் சீற்றத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர், 11 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கஜா புயலாக மாறியது. இப்புயல் அதிதீவிர புயலாக, மிக, மிக பலத்தக் காற்றுடன் வியாழக்கிழமை இரவு நாகை- வேதாரண்யம் இடையே, வேதாரண்யத்திலிருந்து வடகிழக்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் கரையைக் கடந்தது.                                                                              
இரவு சுமார் 11 மணிக்கு கஜா புயல் நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளை நெருங்கத் தொடங்கியபோது, நாகை, வேளாங்கண்ணி, செருதூர், ஆறுகாட்டுத்துறை, வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன், சூறை காற்று வீசத் தொடங்கியது.  இந்தக் காற்று, நள்ளிரவு சுமார் 12 மணிக்குப் பின்னர் மிக, மிக பலத்தக் காற்றாக வேகமெடுத்தது. இரவு 12 மணியிலிருந்து அதிகாலை சுமார் 3.30 மணி வரை சுமார் 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசியது.   
அந்த நேரத்தில், புயல் காற்றின் பேரிறைச்சலும், மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழும் பெரும் சப்தமும், வீடுகளின் மேற் கூரைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பதாகைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கி விழும் சப்தமும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்குப் பின்னர், காற்றின் வேகம் சற்றுத் தணிந்தது. இருப்பினும், காலை 4.30 மணி வரை அவ்வப்போது பலத்தக் காற்று வீசிக்கொண்டிருந்தது. காலை 6 மணிக்குப் பின்னர் காற்றின் சீற்றம் படிப்படியாகக் குறைந்தது.
புயல் சீற்றம் காரணமாக, ரயில் நிலையங்கள், கடைவீதிகள், பேருந்து நிலையங்கள் பெரும் தாக்கத்துக்குள்ளாகி சேதமடைந்தன.  மாவட்டத்தில் 32,818 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதில், ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்திருப்பதால், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான சாலைப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் தடைப்பட்டிருந்தது.  படகுத் துறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி ஃபைபர் படகுகள் ஆற்றுக் கரையோரங்களில் தூக்கி வீசப்பட்டு, சேதமடைந்திருந்தன. முறிந்து சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் மின்கம்பிகள், கிழிந்து தொங்கும் விளம்பரப் பதாகைகள், இடிந்து சேதமடைந்த வீடுகள், மேற்கூரையில்லாத வீடுகள் என காணும் இடங்களெல்லாம் அலங்கோலமாக்கியது கஜா புயல் சீற்றம். 
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 11 முதல் நள்ளிரவு 1.30 மணி வரை, வேதாரண்யத்தின் வடமேற்கு திசையிலிருந்து சுமார் 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியது. ஒரு சில நிமிடங்கள் ஓய்ந்த காற்றின் சீற்றம், அடுத்த சில நிமிடங்களில் வேதாரண்யத்தின் தென்கிழக்குத் திசையிலிருந்து மணிக்கு சுமார் 130 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்றாக வீசத் தொடங்கியது. இரவு சுமார் 1.30 மணியிலிருந்து வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதிகளின் தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்ததன் காரணமாக, வேதாரண்யத்துக்கான சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 
வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை விடியலின்போது விலகிய கஜா புயலின் கோரத் தாண்டவம், நாகை மாவட்ட மக்களின் பல ஆண்டு கால உழைப்பில் உருவான பல கோடி ரூபாய் மதிப்பிலான உடமைகளை நிர்மூலமாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரையிலான கணக்கெடுப்புப்படி, மாவட்டத்தில் 11,512 வீடுகள் சேதமடைந்துள்ளன  எனவும், 2,900 மீன்பிடி ஃபைபர் படகுகள் பகுதியளவிலும், 350 படகுகள் முழுமையாகவும், 125 விசைப் படகுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 11 கால்நடைகள் இறந்துள்ளன. 

9 பேர் உயிரிழப்பு...
மாவட்ட நிர்வாகத்தின் முதல்கட்ட கணக்கெடுப்புப்படி, திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 5 பேரும், வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் மொத்தம் 9 பேர் கஜா புயல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நாகை மாவட்டத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகும் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com