சீர்காழியில் 200 மின்கம்பங்கள், 600 மரங்கள் சாய்ந்தன

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கஜா புயலின் சீற்றத்தால்,  மின்கம்பங்களும், மரங்களும் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்தன.

நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கஜா புயலின் சீற்றத்தால்,  மின்கம்பங்களும், மரங்களும் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்தன.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே தீவிர புயலாக கரையைக் கடந்தது. இதையொட்டி, சீர்காழி பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் லேசாக மழை பெய்தது. பழையார், திருமுல்லைவாசல், கூழையார், பூம்புகார் ஆகிய பகுதிகளில் கடல் சற்று சீற்றமாகக் காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். சீர்காழி பகுதியில் 14 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்டோர் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இரவு 9 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு 12 மணிக்கு மேல் பலத்த சப்தத்துடன் காற்று வீசியது. அவ்வப்போது லேசாக மழை பெய்தது. அதிகாலை 6 மணி வரை காற்றின் வேகம் இருந்தது. அதன்பின்னர், நாகை- வேதாரண்யத்துக்கும் இடையே கஜா புயல் கரையைக் கடந்ததும் சீர்காழி பகுதியில் காற்று வீசுவது முற்றிலுமாக நின்றது. இதனால், முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கெல்லாம் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். 
மரங்கள் சாய்ந்தன: இதனிடையே, கஜா புயலால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருமுல்லைவாசல், எடமணல், திருப்புன்கூர், திருவெண்காடு, மங்கைமடம், கொள்ளிடம், பழையார், வடரெங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த முருங்கைமரம், தென்னைமரம், வாகைமரம், தூங்கண்மூஞ்சி மரம் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளிலும், வீடுகளிலும் விழுந்து சேதத்தை விளைவித்தன. இதேபோல், சீர்காழி மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் 196 மின்கம்பங்கள் சாய்ந்தன. குறிப்பாக, சீர்காழியில் கற்பகம் நகர், நங்கலத்தெருவில் இருந்த 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. 
இது தவிர 7 வீடுகளும், 5 கால்நடைகளும் பாதிக்கப்பட்டன.  சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதலே மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.  நகரில் காற்றுவீசத் தொடங்கிய பிறகே அதாவது, நள்ளிரவு 12.30-க்கு பிறகே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மின்விநியோகம் சீரானது. சீர்காழி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு சனிக்கிழமை (நவ.17) மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் சு. சதீஷ்குமார் தெரிவித்தார்.
சீர்காழியில் முறிந்து விழுந்த மரங்கள் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில்  அப்புறப்படுத்தப்பட்டன. 
கஜா புயல் கரையைக் கடந்ததையடுத்து, வானகிரி மீனவர் தெருவில் கடல்நீர் உள்புகுந்தது. இதையடுத்து, 
ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆங்காங்கே வெட்டிவிட்டு, வருவாய்த்துறையினர் தண்ணீரை வடிய வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com