புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிகளில் 362 பேர்: தென்காசி சு. ஜவஹர்

நாகை மாவட்டத்தில் புயல் சீற்றத்துக்குள்ளான பகுதிகளின்  சீரமைப்புப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர்

நாகை மாவட்டத்தில் புயல் சீற்றத்துக்குள்ளான பகுதிகளின்  சீரமைப்புப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் உள்பட 362 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நாகை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலாளருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் புயல் சீற்ற பாதிப்புக்குள்ளான பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் தென்காசி சு. ஜவஹர், மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தது: 
கஜா புயல் எச்சரிக்கையையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 114 பாதுகாப்பு மையங்களில் 49,622 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 78 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 8,162 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. 
புயல் சீற்றத்தால் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், பழுதடைந்த மின்மாற்றிகளை சீரமைக்கவும் மின்வாரியம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையைச் சேர்ந்த 102 பேரும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைப் படையைச் சேர்ந்த 140 பேரும், தனியார் தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் 120 பேரும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை விரைவாக திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். 
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com