நாகை மாவட்ட புயல் சீற்ற பாதிப்புகளை பார்வையிட்டார் ஸ்டாலின்

கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார்.

கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த இந்தப் புயலால், நாகை மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சேதங்களை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். நாகை அக்கரைப்பேட்டை துறைமுகப் பகுதிக்கு வந்த அவர், அங்கு புயல் சீற்றம் காரணமாக பழுதடைந்த படகுகள் குறித்துக் கேட்டறிந்தார்.  பின்னர், அப்பகுதியில் திரண்டிருந்த மீனவப் பஞ்சாயத்தார் மற்றும் மீனவப் பெண்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம், விழுந்தமாவடி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட புயல் சேதங்களை அவர் பார்வையிட்டார். வேதாரண்யம், காந்திநகர்  தற்காலிக பாதுகாப்பு மையத்தில் தங்கியிருந்த பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, ஆறுதல் கூறினார். பின்னர், முகாமில் தங்கியிருந்த மக்களுக்குப் பால் பவுடர், ரொட்டி, ஆடைகள் உள்ளிட்ட உதவிப் பொருள்களை ஸ்டாலின் வழங்கினார். 
முன்னதாக, நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் புயல் சீற்றத்தால் சேதமடைந்த படகுகளை அவர் பார்வையிட்டு, மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிப் பொருள்களை வழங்கினார். 
முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உ. மதிவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் என். கெளதமன், நிவேதா முருகேன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com