நாகப்பட்டினம்

படகுகள் சேதத்துக்கு மீனவர்கள் திருப்தியடையும் வகையில் நிவாரணம்: அமைச்சர் டி. ஜெயக்குமார்

DIN

புயல் சீற்றத்தால் சேதமடைந்த படகுகளுக்கு, மீனவர்கள் திருப்தியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
கஜா புயல் சீற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட படகுகள் சேதம் குறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார். நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை கடுவையாற்றுப் படகுத் துறையில் நிறுத்தப்பட்டு, புயல் சீற்றத்தால் ஆற்றுக் கரைகளில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ள மீன்பிடி படகுகளையும்,  தரங்கம்பாடி பகுதியில் புயல் சீற்றத்தில் சேதமடைந்த படகுகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புயல் சீற்றத்தால், அக்கரைப்பேட்டை படகுத் துறையிலிருந்து சுமார் 500 மீட்டருக்கும் அப்பால் கடுவையாற்றுக் கரைகளில் வீசப்பட்ட படகுகளைப் பார்வையிட, அமைச்சர் ஜெயக்குமார் ஃபைபர் படகில் பயணித்துச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், மீனவர்களைச் சந்தித்து சேத விவரங்களைக் கேட்டறிந்தார். 
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 
கஜா புயல் சீற்றம் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மீனவர்கள் மாயம், படகுகள் கடலில் தத்தளிப்பு போன்ற பிரச்னைகள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. 
படகுத் துறைகளில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள் புயல் சீற்றத்தால் ஆற்றுக் கரைகளில் வீசப்பட்டுள்ளன. இந்தப் படகுகளை மீனவர்களால் மட்டும் மீட்க இயலாது. எனவே, பெரிய நிறுவனங்களின் உதவியைப் பெற்று படகுகளைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
கஜா புயல் காரணமாக, மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மீன்பிடி படகுகள், வலைகள், படகுகளுக்கான மோட்டார்கள் என மீனவர்களுக்குப் பல்வேறு வகையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேத விவரங்களைக் கணக்கடுக்க 6 துணை இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஓரிரு நாள்களில் அறிக்கை அளிப்பர். 
இதேபோல், பயிர் சேதம், வீடுகள் சேதம், கால்நடைகள் சேதம் உள்பட அனைத்து வகையான பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்புப் பணிகள் முழுமைப் பெற்ற பின்னர், நிவாரண அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார். படகுகளுக்கான நிவாரணம், மீனவர்கள் திருப்தியடையும் வகையில் இருக்கும். 
மீன்களுக்கும், மீனவர்களுக்கும் கடலில் எல்லை தெரியாது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய- இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை தடை செய்ய இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
 இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டு, மீட்டுக் கொண்டு வரும் நிலையில் உள்ள 47 படகுகளை மீட்க ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீட்க முடியாத நிலைக்குள்ளான படகுகளின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் டி. ஜெயக்குமார். மீன்வளத் துறை இயக்குநர் ஜி.எஸ். சமீரன் மற்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT