புயல் சீற்ற சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்

நாகை மாவட்டத்தில் புயல் சீற்ற சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்

நாகை மாவட்டத்தில் புயல் சீற்ற சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேட்டுக் கொண்டார். 
நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்புப் பகுதியில் புயல் சீற்ற சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
புயல் சீற்ற சேதங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். சீரமைப்புப் பணிகளைக்  கண்காணிக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தனி அலுவலர்கள், ஞாயிற்றுக்கிழமை முதல் இயல்பு நிலை திரும்பும் வரை அந்தந்தக் கிராமத்திலேயே தங்கியிருந்து சீரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்வர். 
நாகை மாவட்டம், வேதாரண்யம் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், புயல் சீற்றத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வீடுகள், கால்நடைகள், வேளாண் பயிர்கள், பணப்பயிர்கள், படகுகள் என பல்வேறு வகையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின் விநியோகம், போக்குவரத்து, தண்ணீர் விநியோகம் உள்ளிட்டவை தடைபட்டிருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருப்பதையும் நான் அறிந்துள்ளேன்.
புயலால் ஏற்பட்ட சேதங்கள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று,  மேலும் துரிதமான மீட்புப் பணிகளுக்கும், நிவாரணங்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக இயல்பு நிலை திரும்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, புயல் சீற்ற சீரமைப்புப் பணிகள், நிவாரணங்கள் தொடர்பாக பரப்பப்படும் வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com