புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தைப் போக்க கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அதன் உறுப்பினர் கொள்ளிடம் ரவிச்சந்திரன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
கஜா புயலின் தாக்கத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி மட்டுமில்லாமல், அவர் சார்ந்த குடும்பத்தினருக்கு பொருளாதார, உளவியல் சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, ஆடை, இருப்பிடம், சுகாதாரம் ஆகியவைகள் கிடைக்க தற்காலிக ஏற்பாடுகள் தடையின்றி விரைவாக நடைபெறவேண்டும். இதற்கு அரசு, அருகாமையிலிருக்கும் மாவட்டங்களிலிருந்தும், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளை முறைப்படுத்தி, விரைந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம் குறித்து விரைவாக கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இடைக்கால நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.
இதைத்தொடர்ந்து, பாதிப்படைந்துள்ள அரசு இயந்திரத்தின் அனைத்து சேதங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, பழையபடி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்களுக்கான கணக்கீடுகள் அடிப்படையில் முழுமையான நஷ்டஈடு வழங்கவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு வட்டியில்லா நீண்ட கால கடனுதவி வழங்க வேண்டும். கடுமையான பொருளாதார பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு சுனாமியின் போது உதவியதை போல் முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இதேபோல் சிறு, குறு வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மானியத்தில் கடனுதவி வழங்கவேண்டும். வன உயிர்கள் உள்பட பல்லுயிர் சேதங்கள் கடுமையாக ஏற்பட்டுள்ளன. இதனால், வனத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், சுற்றுச்சூழல் மேம்படும் வகையில் தீவிர மரம் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கஜா புயலால் பாதிப்படைந்துள்ள மக்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அரசு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விரைந்து செயலாற்ற வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com