புரட்டிப் போட்ட கஜா: சொந்த ஊரிலேயே அகதிகளாக தவிக்கும் மக்கள்

கஜா புயல் சீற்றம் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல், நாகை மாவட்ட மக்கள் 3 நாள்களுக்கும் மேலாக தங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக தவித்து வரும் அவலம் நீடித்து வருகிறது.


கஜா புயல் சீற்றம் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல், நாகை மாவட்ட மக்கள் 3 நாள்களுக்கும் மேலாக தங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக தவித்து வரும் அவலம் நீடித்து வருகிறது.
கஜாவின் கோரத் தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகள் மிக கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு, விழுந்தமாவடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மல்லிகை, கார்த்திகை கிழங்கு, மா, நெல், வாழை, வெற்றிலை என பணப் பயிர்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களையும் அழித்தொழித்துள்ளது கஜா புயலின் சீற்றம். அனைத்து வகை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம்.
இப்பகுதிகளில் சாலைகளில் முறிந்து சரிந்த பல்லாயிரக்கணக்கான மரங்களால் போக்குவரத்துத் தடைப்பட்டிருப்பதுடன், மின் விநியோகம், தகவல் தொடர்பு உள்ளிட்டவைகளும் தடைப்பட்டிருப்பதால், வேதாரண்யம் மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் வேதனைக் குரல் கூட வெளியே தெரியாமலேயே கரைந்து போய்க் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்புப்படி, சுமார் 32,818 மரங்கள் முறிந்து சரிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், 10 சதவீத மரங்கள் கூட இதுவரை அகற்றப்படவில்லை என்பதே உண்மையாக உள்ளது. இதன் காரணமாக, பல கிராம மக்கள் வெளியுலகத் தொடர்பற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் மின் கம்பங்கள் பழுதடைந்திருப்பதாகக் குறிப்பிடப்படும் நிலையில், இதில் மூன்றில் ஒரு பங்கு மின் கம்பங்கள் கூட கடந்த 3 நாள்களாக சீர் செய்யப்படவில்லை. மேலும், பழுதடைந்த 520 மின் மாற்றிகளில் 111 மின் மாற்றிகள் மட்டுமே இதுவரை சீர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக, நாகை மாவட்டத்தின் நகர்ப்புறப் பகுதிகள் கூட 4 நாள்களாக இருளிலேயே மூழ்கியுள்ளன.
அனைத்துத் தேவைகளுக்கும் அடிப்படை அத்தியாவசியத் தேவையாக உள்ள மின் விநியோகத் தடையால், மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் மிகுந்து காணப்படுகிறது. மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழலில், பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆற்றிலும், குளத்திலும் தேங்கியிருக்கும் அழுக்குப் படிந்த நீரையே தங்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
தொற்று நோய்களைத் தவிர்க்க, தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி அருந்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், உணவுக்குக் கூட அடுப்பை பற்ற வைக்க முடியாத நிலையில் தான் பல கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன புயல் சீற்றத்தில்.
நாகை மாவட்டத்தில் 2 நாள்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புப்படி சுமார் 11,512 வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சேதமடைந்த வீடுகளின் சீரமைப்புக்குத் தற்காலி மற்றும் நிரந்தர நிவாரணம் அளிக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டாலும், பேரிடர் நிவாரண வரையறைப்படியான உச்சபட்ச நிவாரணத்தை வழங்கினாலும் கூட, சேதமடைந்த வீடுகளில் தற்காலிக சீரமைப்பைக் கூட முழுமையாக மேற்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.
நாகை மாவட்டத்தில் 523 பாதுகாப்பு மையங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில், உணவுத் தட்டுப்பாடும், குடிநீர்த் தட்டுப்பாடும் மக்களை வாட்டி வதைப்பதன் விளைவாக கிராமச் சாலைகள் பெரும்பாலும், மறியல் கலங்களாக மாறியுள்ளன.
இந்தப் போராட்டங்களை மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார விரக்தியின் வெளிப்பாடாகக் கருதி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரைவான தீர்வுக்கு அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com