பொதுமக்களுக்கு அயோடின் உப்பு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை: ஆட்சியர் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு அயோடின் கலந்த உப்பு கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பொதுமக்களுக்கு அயோடின் கலந்த உப்பு கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சுகாதாரத் துறைச் செயலர் அறிவுறுத்தல்படி, அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்புத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கிலும், அயோடின் கலந்த உப்பு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. அயோடின் சத்து மனித வாழ்வுக்கு இன்றியமையாத உயிர்ச்சத்து. இந்தச் சத்துக் குறைபாடு ஏற்பட்டால் மூளை வளர்ச்சி குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு, கரு கலைதல், முன் கழுத்துக் கழலை, குழந்தைகள் ஊனத்துடன் பிறத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. 
இதையொட்டி, மக்கள் பயன்படுத்தும் உப்புகளில் அயோடின் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அயோடின் சோதனைக்கான கரைசல் குப்பி கொள்முதல், முன் கழுத்துக் கழலை குறைபாடுகள் ஆய்வு, விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. இப்பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உறுப்பினர் - செயலராக செயல்படுவார். உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆணையர், மாவட்ட வழங்கல் அலுவலர், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர், சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர், நுகர்வோர் அமைப்புப் பிரதிநிதி, தாய்- சேய் நல அலுவலர், உப்பு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, அயோடின் உப்பு குறித்த திட்டங்களை ஆய்வு செய்யும். மக்களுக்கு எளிய முறையில் திட்டங்களைக் கொண்டுச் செல்லும் வழிகாட்டல்களை தொழில்நுட்பக் குழு மேற்கொள்ளும். அயோடின் உப்பு சோதனையாக,  வேதாரண்யத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் உப்புகளில் அயோடின் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டுகளின் விற்பனைத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் தொழிலாளர் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் பயன்படுத்தப்படும் உப்பு மாதிரிகளை பள்ளிக்குக் கொண்டு வரச் செய்து, பரிசோதனை கரைசலைக் கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com