விசைப் படகுகளுக்கு மானிய டீசல் வழங்க கோரிக்கை: இந்திய மீனவர் சங்கம்

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் விசைப் படகுகள் அனைத்துக்கும் மானிய  டீசல் வழங்க வேண்டும்

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் விசைப் படகுகள் அனைத்துக்கும் மானிய  டீசல் வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் தொடர் அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தமிழக முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: 
டீசல் விலையேற்றத்தால், மீன்பிடித் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்நிய செலாவணியைப் பெற்று தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் டீசல் விலையேற்றத்தால் கடனாளியாகி வரும் அவலத்தை போக்க வேண்டும். டீசலை நம்பி தமிழகத்தின்13 கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் டீசலுக்கான வரிவிதிப்பு குறைக்கப்பட்டு மானிய விலையில்  டீசல் வழங்கப்படுகிறது. இதேபோல்,  தமிழகத்திலும் வழங்க வேண்டும். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் மூலம் வழங்கப்படும் மானிய டீசல் விசைப்படகு ஒன்றுக்கு மாதம் 3,000 லிட்டர், சிறிய வகைப் படகுக்கு 420 லிட்டர் என உயர்த்தி வழங்கினால் தான் மீன்பிடித் தொழில் பாதுகாக்கப்படும். 
நாகை மாவட்டத்தில் சுமார் 1,117 விசைப் படகுகளும், 4,200 சிறிய வகைப் படகுகளும்  உள்ளன. இவைகளில் பெரும்பாலான படகுகளுக்கு மானிய டீசல் வழங்குவதில்லை. படகுகள் அனைத்தும் பதிவு செய்யாமல் மீன்துறையால் புறக்கணிக்கப்பட்டு வருவதால் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடல் காவல் படையாலும், கடற்படையாலும் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விசைப் படகுகளும்  பதிவு செய்யப்பட்டு, மானிய டீசல் மற்றும் அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்குவதுபோல், நாகை மாவட்டத்திலும் அனைத்து விசைப் படகுகளையும் பதிவு செய்து, சலுகைகளை வழங்கி, அரசுப் பாதுகாக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் அனைத்துப் படகுகளுக்கு அரசு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்பது மீனவ மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையாகும். 
இதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றவில்லையெனில் தொடர் அறப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com