முள்ளியாற்றில் தண்ணீர் திறக்கக் கோரி மீண்டும் சாலை மறியல்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வேதாரண்யம் அருகே சம்பா சாகுபடிக்கு முள்ளியாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, 2 -ஆவது முறையாக

வேதாரண்யம் அருகே சம்பா சாகுபடிக்கு முள்ளியாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, 2 -ஆவது முறையாக விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 நாகை மாவட்டம், தாணிக்கோட்டகம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களிலும், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட மேலமருதூர் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களிலும், சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
இப்பயிர்களைக் காப்பாற்ற திருத்துறைப்பூண்டியிலிருந்து வரும் முள்ளியாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் ரவி தலைமையில் விவசாயிகள் செப்.18-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில், 2 நாள்களில் தண்ணீர் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், விவசாயிகள் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். 
ஆனால், அதிகாரிகள் உறுதியளித்தப்படி தண்ணீர் திறக்கப்படாததால், வேதாரண்யத்தை அடுத்த செங்காதலை பாலம் அருகே விவசாயிகள் மீண்டும் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இன்னும் 2 நாள்களில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து,மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் வேதாரண்யம் (வாய்மேடு- கரியாப்பட்டினம் வழி) திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com