தூய்மைப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

தூய்மைப் பணி சேவை முழு வெற்றி பெற, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

தூய்மைப் பணி சேவை முழு வெற்றி பெற, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,   தூய்மை விழிப்புணர்வு பேரணியையும், விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் பயணத்தையும் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியர் மேலும் பேசியது:  தூய்மை பாரத இயக்கத்தின் 4-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, செப். 15-ஆம் தேதி முதல் அக். 2-ஆம் தேதி வரை தூய்மை சேவை பணி இயக்கம் நடைபெறுகிறது. தூய்மை பாரத இயக்கத்தின் பணிகளை விரைவுப்படுத்துதல், மக்கள் ஈடுபாட்டை உறுதி செய்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.  இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, தூய்மை ரதம் மூலமான பிரசாரம் மாவட்டத்தில் தொடங்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு ரதம் வலம் வரவுள்ளது. சுய உதவிக் குழுவினர், கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.
பொது இடங்கள், கல்வி நிலையங்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளையும், அவற்றின் சுற்றுப் புறங்களையும் தூய்மையாகப் பராமரிக்க சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், தன்னார்வலர்கள் முனைப்புக்காட்ட வேண்டும். நாகை மாவட்டம், தூய்மை மாவட்டமாகத் திகழ பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர். 
முன்னதாக, தூய்மை சேவைப் பணி உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசங்களைப் படித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சங்கர், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் க. இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் மற்றும் சுய உதவிக் குழுவினர், சமூக ஆர்வலர்கள் உறுதிமொழி ஏற்றனர். 
நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, நாகை அவுரித் திடலில் நிறைவடைந்தது. சுமார் 500-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com