நாகப்பட்டினம்

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு

அ. அன்புமணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவேண்டும் என    இப்பகுதி வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 2 வருவாய்க் கோட்டங்களில் பெரியது மயிலாடுதுறை வருவாய்க் கோட்டமாகும். இதில் 3 சட்டப் பேரவைத் தொகுதிகள், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி மற்றும் குத்தாலம் ஆகிய 4 வட்டங்களும் உள்ளன. 
மக்கள் தொகையை ஒப்பிட்டுப் பார்த்தால் நாகையை விட மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம். மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலு பெற்று வருகிறது.  மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில்  5 கல்லூரிகள் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், பிரசித்திப் பெற்ற வழிபாட்டுத்  தலங்கள், தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களும் உள்ளன.
 இதனால், மயிலாடுதுறைக்கு வந்து செல்வோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரிப்பதாலும், தற்போது  பயன்பாட்டில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட  இட நெருக்கடியாலும் எழுந்தது தான், மயிலாடுதுறையில் புதிய பேருந்து  நிலையம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை. இந்த விஷயத்தில் ஆளும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் உரிய  கவனம் செலுத்தாததால் சுமார் 25 ஆண்டுகளாக  இது நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே உள்ளது. தேர்தல் காலங்களில், மயிலாடுதுறை  தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சிப்  பாகுபாடின்றி வாக்காளர்களிடம் அளிக்கும் வாக்குறுதிகளில் முதன்மை இடத்தைப் பெறுவது புதிய பேருந்து நிலையம்  அமைப்பேன் என்பதும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் அளித்த வாக்குறுதி மறக்கப்படுவதும் வாடிக்கை. 
  தரங்கம்பாடிசாலையில் உள்ள  நகராட்சிக்குச் சொந்தமான இடம்  மற்றும்  திருவிழந்தூரில் உள்ள ஸ்ரீ பரிமளரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான  2 இடங்கள்  தேர்வு  செய்யப்பட்டு,அரசின்  பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்பட்ட குளறுபடிகளால் அந்த 2 இடங்களிலும் பேருந்து நிலையம் அமைக்க முடியவில்லை.
 இடம் தேர்வு: பின்னர் 2016-17 ஆம் ஆண்டுகளில் மயிலாடுதுறை  நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட தொடர் முயற்சியால்,  புதிய பேருந்து நிலையத்துக்காக மயிலாடுதுறை  வட்டம்,  மணக்குடி கிராமத்தில் 13.6 ஏக்கர்  பரப்பளவுள்ள  தருமபுரம்  ஆதீனத்துக்குச் சொந்தமான இடம்  வாங்கப்பட்டு, வரை படங்கள் தயார் செய்யப்பட்டு, நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் தமிழக அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் செல்லும் சாலை குறுகிய சாலையாக  இருப்பதுடன், மயிலாடுதுறை நகர பகுதியிலிருந்து சுமார் 5 கி. மீட்டர் தூரத்தில் உள்ள கிராமமாகும். மயிலாடுதுறையில் புறவழிச் சாலை அமைக்கப்படாமல், மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், அது பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும்  எதிர்பார்க்கும் அளவில் பயன்தராது  எனவும்  சமூக  ஆர்வலர்கள்  கருத்துத்  தெரிவித்து வருகின்றனர்.   
அரசாணை வெளியீடு: இந்நிலையில்,தற்போதைய அதிமுக எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியதின் அடிப்படையில் மயிலாடுதுறையில் தனியார் பங்களிப்புடன் ரூ.38.05 கோடி திட்ட மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என 24-7-2018 அன்றைய தேதியில் தமிழக அரசு  அரசாணை வெளியிட்டு ,2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில்,பேருந்து நிலையம் கட்டவதற்காக தேர்வு செய்யப்பட்ட  இடத்தில்  தடுப்பு வேலிகள்  அமைப்பதற்காக கருங்கல் தூண்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. மற்றவகையில் எவ்வித முன்னேற்பாடு பணிகளும் நடைபெறவில்லை.
பொதுமக்கள் சந்தேகம்: இதனால், மயிலாடுறையில் புதிய பேருந்து  நிலையம்   கட்டப்படுமா? அல்லது அறிவிப்போடு  நின்று விடுமா? என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் தற்போது 2 இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்படுவதால் பேருந்து பயணிகள், கல்லூரி  மாணவர்கள், அரசு  அலுவலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும்  வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையங்களில்  ஒன்றான காமராஜர் பேருந்து நிலையமானது 17-4-1963-இல் அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதாகும். சுமார் 50  பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் வகையில்  கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில், தற்போது நாளொன்றுக்கு 350- க்கும் மேற்பட்ட பேருந்துகளின் இயக்கம் நடைபெறுகிறது.  இதைத் தவிர்த்து, நகருக்கு வந்து செல்வோர்களின்  எண்ணிக்கையும் நாள்தோறும்அதிகரிப்பதால்  இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், பயணிகளுக்குத்  தேவையான  எவ்வித  அடிப்படை வசதிகளும் இல்லாத பேருந்து நிலையமாக  மாறியுள்ளது.இதேபோல், நகரபூங்கா அருகில் செயல்பட்டு வரும் தற்காலிகப் பேருந்து நிலையமும் இதே நிலையில்தான் உள்ளது. 1996 முதல் இதுநாள் வரை செயல்பட்டு  வரும்  இந்த தற்காலிகப் பேருந்து நிலையம் நிரந்தரப் பேருந்து  நிலையமாகவே மாறிவிட்டது.
இதுகுறித்து,தொகுதி எம்எல்ஏ  வீ.ராதாகிருஷ்ணன் கூறியது:
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில்  தொடங்கப்பட வுள்ளன. தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். நகராட்சி  நிர்வாகத்திடம் போதிய நிதி வசதி இல்லை என்பதால், துறை  சார்ந்த ஒப்புதல்கள் பெறப்பட்டு, தனியார் பங்களிப்புடன் பேருந்து நிலையம்   கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.
நகராட்சிப் பொறியாளர்   பி.ஜோதிமணி கூறியது:
  பப்ளிக் பிரைவேட் பாட்னர் ஷிப்  நிதி மூலம் (பிபிபி) பேருந்து நிலையம் கட்டுவதற்கு, தமிழக அரசு  ஆணை வெளியிட்டுள்ளது. இதனால்,  அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி, கட்டுமானம்,  நிதி, கட்டுமானத்துக்குப் பின்னர் நிர்வகிக்கப்படும் முறை ஆகியவை குறித்து, திட்ட  அறிக்கை தயார்  செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக  இந்த கோப்புகள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் டெண்டர்  கோரப்பட்டு  பணிகள் தொடங்கப்படும் என்றார். 
 சமூக  ஆர்வலர் இரா.முரளிதரன் கூறியது:
2001-2006  அதிமுக  ஆட்சிக்  காலத்தில் தமிழக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால்,திருவிழந்தூரில் உள்ள  ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோயிலுக்குச் செந்தமான  இடத்தில்  புதிய பேருந்து  நிலையம் கட்டுவதற்காக  அடிக்கல்  நாட்டப்பட்டு, பின்னர் ஆட்சி  மாற்றத்தால் கிடப்பில்  போடப்பட்டது.
பேருந்து  நிலையம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கிராமப் பகுதி. சுற்றுச்சாலை அமைக்கப்படாமல் பேருந்து நிலையம்  கட்டப்பட்டால், எதிர்பார்த்த  பயனும் இருக்காது. அதேபோல்,  தற்போது அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் வந்து செல்லவேண்டும் என்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். 
 தனியார் பங்களிப்பில் பேருந்து  நிலையம்   கட்டப்பட்டால் நகராட்சிக்கு  இழப்பு  ஏற்படும். கட்டுமானப் பணி நிறைவுக்குப் பின்னர், ஒப்பந்தத்தின் அடிப்படையில்   குறிப்பிட்ட  ஆண்டுகளுக்கு தனியாரால் பேருந்து  நிலையம்  நிர்வகிக்கப்படும். இதனால்    பொதுமக்களும், பயணிகளும் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆகவே, பல்வேறு திட்டங்களுக்கு  நிதி ஒதுக்கீடு  செய்து, நிதியை  விரயமாக்கும்  தமிழக  அரசு,  மயிலாடுதுறை பகுதி  வாழ்  மக்களின் கோரிக்கையில் சிறப்பு கவனம்  செலுத்தி, புதிய பேருந்து  நிலையம்  கட்டுவதற்கான நிதி முழுவதையும் அரசே  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT