நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு: தொடக்கத்தில் தாமதம்;நிறைவில் விறுவிறுப்பு

DIN

நாகை மக்களவைத் தொகுதியில் 1,738 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்க நேரத்தில் ஏற்பட்ட சில தாமதங்களைத் தவிர, பெரிய அளவிலான பிரச்னைகளின்றி வாக்குப் பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
நாகை மாவட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி. இத்தொகுதியின் வாக்குப் பதிவுக்காக 1,738 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 
சீர்காழியில் 288 வாக்குச் சாவடிகளிலும், மயிலாடுதுறையில் 266 வாக்குச் சாவடிகளிலும், பூம்புகாரில் 306 வாக்குச் சாவடிகளிலும், திருவிடைமருதூரில் 291 வாக்குச் சாவடிகளிலும், கும்பகோணத்தில் 287 வாக்குச் சாவடிகளிலும், பாபநாசத்தில் 300 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 
தொடக்க நிலை குளறுபடிகள்...
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் சீனிவாசபுரம், தருமபுரம், திருவிழந்தூர், பட்டவர்த்தி, கஞ்சாநகரம், சீர்காழி தொகுதியில் பெஸ்ட்மெட்ரிக் பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தாடாளன் வீதியில் உள்ள உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பூம்புகார் தொகுதியில் தேரழுந்தூர், திருவாவலங்காடு, திருமெய்ஞானம், மாணிக்கப்பங்கு, திருவிடைமருதூர் தொகுதியில் பந்தநல்லூர், கொடியாளூர், கும்பகோணம் தொகுதியில் சோழபுரம், சாக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில், வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆர்வத்துடன் வாக்களித்த பெண்கள்...
வாக்குப் பதிவு தொடங்கப்பட்ட காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையில்  முதியவர்கள், பெண்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், இறுதி நேர பரபரப்பைத் தவிர்க்கவும் அவர்கள் தொடக்கத்திலேயே வாக்களிக்க முனைப்புக் காட்டினர். பூம்புகார் தொகுதிக்குள்பட்ட ஆக்கூர், தாருஸ்ஸலாம் முஸ்லிம் சிறுபான்மையினர் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் திரளான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலை நேரத்திலேயே தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். 
அதிகாரியால் அழிக்கப்பட்ட வாக்குகள்...
சீர்காழி, எஸ்.எம்.எச். மேல்நிலைப்பள்ளியில், வாக்குச் சாவடி எண் 154-இல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,  அந்த வாக்குப் பதிவு இயந்திரம் சீலிடப்படாமல் இருந்தது தெரியவந்தது. 6 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் அந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை வாக்குச் சாவடி அலுவலர், வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் திறந்து காட்டி சீலிட முயன்றார். அப்போது, தவறுதலாக கிளியர் பொத்தானில் அவரது கை பட்டதால், ஏற்கெனவே பதிவாகியிருந்த 6 வாக்குகளும் அழிந்தன.  இதனால், அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டு, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.  இதையடுத்து, ஏற்கெனவே வாக்கைப் பதிவு செய்திருந்த அந்த 6 வாக்காளர்களையும் வரவழைத்து, மீண்டும் அழைத்து வந்து வாக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சிகளின் முகவர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பிற்பகல் 3 மணிக்குள் 4 பேர் மீண்டும் வரவழைக்கப்பட்டு, மறு வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டனர். வாக்கைப் பதிவு செய்து விட்டு வெளியூர் சென்றிருந்த 2 பேர் பிற்பகல் 5 மணி அளவில் அழைத்து வரப்பட்டு, வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 
பாதியில் மாற்றப்பட்ட 
இயந்திரம்...
திருவிடைமருதூர் தொகுதி துகிலியில், கஸ்தூர்பா காந்தி நடுநிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி எண் 113-இல் வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் 206 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. பழுது நீக்கப் பணிகளுக்குத் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்காததால், வாக்குப் பதிவுக்கு மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனால், அங்கு சுமார் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு தடைப்பட்டது. 
மனிதநேயம்...
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க வரும் போது அவர்களுக்குப் பலரும் உதவி செய்ய முன்வந்தனர். ஆடுதுறை, குமரகுருபரர் சுவாமி  மேல்நிலைப்பள்ளியில் செஞ்சிலுவை சங்கத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
ரஷிய மாணவி வாக்களிப்பு...
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதல் தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்கை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சகோதரிகள் இருவர், தங்களின் முதல் வாக்கைப் பதிவு செய்து விட்டு மகிழ்வுடன் திரும்பினர். 
அவர்களின் வாக்குப் பதிவு அனுபவத்தை கேட்டபோது, சிவகாசி வருவாய்க் கோட்டாட்சியர் தினகரனின் மகள்களான அவர்களிருவரும் மருத்துவக் கல்லூரி மாணவியர் என்பது தெரியவந்தது. மூத்தவரான ஸ்ரீநிதி, ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வருவதாகவும்,  இளையவரான  ஸ்ரீதுர்கா, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிலுவதாகவும் தெரிவித்தனர். ரஷ்யாவில் பயின்று வரும் ஸ்ரீநிதி விடுமுறையில் வந்து, தனது வாக்கைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஆறுதல் அளித்த அடிப்படை வசதிகள்....
வெயிலின் தாக்கம் காரணமாக, பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கட்டடத்துக்குள் வாக்காளர்கள் நிற்க வசதியில்லாத வாக்குச் சாவடிகளில் இந்த வசதி அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும், குடிநீர் வசதி, மின்சார வசதி உறுதி செய்யப்பட்டிருந்தன. வாக்குச் சாவடி மையத்தின் நுழைவு பகுதிக்கும், வாக்குப் பதிவு இடத்துக்கும் அதிக தூரம் இருந்த வாக்குப் பதிவு மையங்களில் வாகனங்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டன. இது விதி மீறலாக இருந்தாலும், முதியவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. 
சலசலப்பு....
பூம்புகார் தொகுதிக்குள்பட்ட மணிக்கிராமம், திருவிடைமருதூர் தொகுதிக்குள்பட்ட கோட்டூர் ஆகிய பகுதிகளில், வாக்குச் சாவடிக்குள் வாக்குச் சேகரிப்பதாகக் கூறி, அரசியல் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, சில நிமிடங்கள் இந்தப் பகுதிகளில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.  போலீஸார் தலையிட்டு அமைதிப்படுத்திய பின்னர், வாக்குப் பதிவு நடைபெற்றது.
காற்றில் பறந்த விதிகள்...
சாலையில் எந்த அரசியல் கட்சிகளின் சின்னங்களையும் எழுதக் கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால், இந்த விதி மயிலாடுதுறை வானாதிராஜபுரம் பகுதியில் கவனத்தில் கொள்ளப்படாமலிருந்தது.  வாக்குச் சாவடிக்குச் செல்லும் பாதைகளில் திமுக மற்றும் அதிமுகவின் சின்னங்கள் சாலைகளில் அதிகளவில் வரையப்பட்டிருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT