வலிவலம் அம்மா விளையாட்டுப் பூங்கா சீரமைக்கப்படுமா ?

திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள அம்மா விளையாட்டுப் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள அம்மா விளையாட்டுப் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வலிவலத்தில் ரூ. 30 லட்சம் செலவில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட அம்மா பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள், பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டன. இந்த பூங்காவானது காலை மாலை இரு நேரங்களில் திறக்கப்பட்டு சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் கிராமப்புற விளையாட்டு வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் மரங்கள் விழுந்து பூங்கா பெருமளவு சேதமடைந்தது. அப்போது விழுந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படாமல் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்டு பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பழைய நிலையில் செயல்பட தொடங்கியது. பூங்காவினுள் இருந்த விளையாட்டு உடற்பயிற்சி உபகரணங்கள் நீண்ட நாள் பயன்பாடற்ற நிலையில் இருந்ததால் பழுது ஏற்பட்டு பெரும்பாலான உடற்பயிற்சி உபகரணங்கள் சரியாக செயல்படாமல் உள்ளது. இதனால், இங்கு உடற்பயிற்சி செய்ய வரும் இளைஞர்கள் ஏமாற்றத்துடன் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் செல்கின்றனர்.  எனவே, பழுந்தடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும், பூங்காவின் செயல்பாட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும், பூங்காவில் பயன்தரும் மரக்கன்றுகள் மற்றும் வண்ணச் செடிகளை அமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் உடற்பயிற்சி செய்ய வரும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
இதுகுறித்து, அப்பகுதி இளைஞர் ஒருவர் கூறியது: அம்மா விளையாட்டு பூங்கா இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு நாங்கள் காலையில் இங்கு வந்து விடுவோம். மேலும், இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  தற்போது, பெரும்பாலான உபகரணங்கள் பயன்பாடற்ற நிலையில் இருப்பதால் எங்களால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதேபோல், பூங்கா திறக்கப்படும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதால் வேலைக்கு மற்றும் கல்லூரிக்கு செல்வோர் சரியாக உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. எனவே, பூங்கா திறக்கப்படும் நேரத்தை அதிகப்படுத்தவும், பூங்காவை சீரமைப்பு செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com