உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிர்நீத்த

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிர்நீத்த சி.ஆர். பி. எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகையில் திங்கள்கிழமை அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
நாகை, வெளிப்பாளையம் வர்த்தக அமைப்புகள், லயன்ஸ், ரோட்டரி, ஜேசீஸ் சங்கங்களின் சார்பில்நாகை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய  இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அருள்மிகு நீலாயதாட்சியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு மோட்சத் தீபங்கள் ஏற்றப்பட்டு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன. பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதி மொழியேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளையொட்டி திங்கள்கிழமை காலை 1 மணி நேரம் நாகை மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்திய வர்த்தக தொழிற்குழுமத் தலைவர் ராமசந்திரன், பாஜக தஞ்சை கோட்டத் தலைவர் டி. வரதராஜன் மற்றும் வணிகர் சங்கங்கள் ,சேவை சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி வளாகத்தில், தருமையாதீனம் மற்றும் தருமபுரம் ஆதீனக் கல்வி நிலையங்கள் சார்பில் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு திங்கள்கிழமை வீரவணக்கம் மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தருமையாதீனக் கல்வி நிலையங்களின் செயலர் மா. திருநாவுக்கரசு, தருமையாதீனக் கலைக் கல்லூரியின் முதல்வர் சி.சுவாமிநாதன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீகுருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 
தேசிய மாணவர் படை அலுவலர் துரை. கார்த்திகேயன் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியை தருமையாதீனக் கலைக் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு பொறுப்பாசிரியர் ஜி.செளந்தரராஜன் ஒருங்கிணைத்தார்.
இதேபோல், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாயூரம் வழக்குரைஞர் சங்கம் சார்பில், அதன் தலைவர் இராம.சேயோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மை சார்பு நீதிபதி ஆனந்தன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதிபதி செல்லபாண்டியன், விரைவு குற்றவியல் நீதிபதி ஜியாவூர் ரஹ்மான் உள்ளிட்டோர் ராணுவ வீரர்களின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
நெல்கொள்முதல் நிலையத்தில்...
சீர்காழியை அடுத்த மாதிரவேளூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேசியக் கொடியுடன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த கொள்முதல் நிலையத்தில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளார்கள் , தேசியக் கொடியேந்தி, காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 5 நிமிடம்  மௌனஅஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். 
வேதாரண்யத்தில்...
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, ஓரடியம்புலம் சிவசக்தி சர்வதேச மழலையர் பள்ளியில் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம். பாரதி தலைமை வகித்தார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப் படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
திருக்குவளையில்...
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, கீழையூர் ஆன்மிக இளைஞர் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
கீழையூர் பள்ளிக்கூட தெரு அருகே தியாகிகளின் உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், கீழையூர் ஆன்மிக இளைஞர் பேரவையின் தலைவர் சி.பி.பாலாஜி, துணைத்தலைவர் ஆர்.செந்தில் ,செயலாளர் எஸ்.பிரபாகரன், பொருளாளர் பி.அன்புமணி ,கெளரவ ஆலோசகர்கள் வி. ஞானமணி , எம்.விஜய் மற்றும் ஆன்மிக இளைஞர் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
மௌன ஊர்வலம்...
தரங்கம்பாடி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் கருணா ஜோசபாத் தலைமை வகித்தார். தலைமையாசிரியை செசிலி, தூய ஜான் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை புஷ்பலதா  மற்றும், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தரங்கம்பாடியின் முக்கிய வீதிகளின் வழியை கோட்டை நுழைவு வாயில் வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அங்கு வீரர்களின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தூய தெரசா மகளிர் கல்லூரி முதல்வர் தம்பையா பிரபுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com