நாகை அகஸ்தீசுவர சுவாமி கோயில் தேரோட்டம்

நாகை, வெளிப்பாளையம் அருள்மிகு அகஸ்தீசுவரசுவாமி திருக்கோயிலின் மாசிமக பிரமோத்ஸவ விழா திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை, வெளிப்பாளையம் அருள்மிகு அகஸ்தீசுவரசுவாமி திருக்கோயிலின் மாசிமக பிரமோத்ஸவ விழா திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத அகஸ்தீசுவர சுவாமி திருக்கோயில். இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டது எனக் குறிப்பிடப்படுகிறது. சிவபெருமான் - பார்வதி திருமணக் கோலத்தை காண தேவர்களும், முனிவர்களும்  கயிலாயத்தில் குழுமியதால் வடதிசை தாழ்ந்ததாகவும், அதனை சமன் செய்ய இறைக் கட்டளையை ஏற்று, வேதாரண்யம் பயணப்பட்ட அகஸ்திய முனிவர், நாகையில் தங்கியபோது, இத்தல மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மக பிரமோத்ஸவ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான விழா பிப். 10-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், அருள்மிகு தியாகராஜர் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு  நடைபெற்றது. பின்னர், ஐதீக முறைப்படி வழிபாடுகள் நடத்தப்பட்டு, வேதமந்திர முழக்கங்களும், இன்னிசை வாத்தியங்களும் முழங்க காலை சுமார் 10 மணிக்கு திருத்தேருக்கு வடம் பிடிக்கப்பட்டது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com