"தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன்'

தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக வந்தேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 159 மீனவ குடும்பங்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில், தலா 20 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று, மீனவ பெண்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்கி பேசியது: விவசாயிகள் உற்பத்தி செய்யும் சோற்றை மட்டுமே சாப்பிட முடியாது. மீன்களை வைத்தால்தான் சாப்பிட முடியும். ஆக, இரண்டும் கலந்ததுதான் நமது வாழ்வாதாரம். நான் புயல் பாதிப்புக்குப் பின்னர் இங்கு வந்தபோது பார்த்த சூழல் இன்னும் மாறவில்லை. குடியிருப்புகளை பொதுமக்களே சீரமைத்துக் கொண்டதைப் பார்க்கிறேன். அரசு தரப்பில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அரசு கட்டடங்கள் கூட காக்கைக் கொத்தியது போலத்தான் இருக்கின்றன.
நான் பெரிய அதிகாரி அல்ல. மீனவர்களிடையே மிகப்பெரிய ஒற்றுமை இருப்பது எனக்குத் தெரியும். இப்படி ஒற்றுமையாகக் கூடியிருந்தால், அது வாக்காக மதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் சிதறிக்கிடக்கிறீர்கள். புயல் நிவாரணமாக வந்த பொருள்கள் அனைத்தும் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்கக் கூடாது. இந்த நிலையை மாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கிராம சபைகளின் நோக்கம் உங்களுக்கும் பொருந்தும். எனவே, அதை பயன்படுத்த வேண்டும். நான் வந்திருப்பது தேர்தலுக்காக அல்ல, உங்கள் ஆறுதலுக்காக. பொன்னியின் செல்வன் தொடர்பான படம் எடுப்பது குறித்து பேசினார்கள். படத்தில் நடிப்பதைவிட நிஜமாகவே பொன்னியின் செல்வர்களில் இருப்பதையே நான் விரும்புகிறேன் என்றார் கமல்ஹாசன். நிகழ்ச்சியில், இன்ஸ்பயர் அமைப்பின் இயக்குநர் ரேவதி, மீனவ கிராம பஞ்சாயத்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com