எரிவாயு குழாய் பதிப்பு: ஏக்கருக்கு ரூ.1.10 லட்சம் வழங்க கெயில் ஒப்புதல்

எரிவாயு குழாய் பதிக்கும் பகுதியில், பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு தலா ரூ.1.10 லட்சம் வழங்க கெயில் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எரிவாயு குழாய் பதிக்கும் பகுதியில், பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு தலா ரூ.1.10 லட்சம் வழங்க கெயில் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில், 20-க்கும் மேற்பட்ட  ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய்  எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திராவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவாக வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஆகிய ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் வரை 27 கிலோமீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனினும், எரிவாயு குழாய்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. வேம்படி கிராமத்தில் பணி முடிந்து தொடர்ச்சியாக 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில், குழாய் பதிக்க தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை இறக்கவிடாமல் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழாய்களை லாரிகளிலிருந்து இறக்காமல் அதிகாரிகள் நிறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சீர்காழி வட்டாட்சியர் இரா. சங்கர் தலைமையில் விளக்கக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் என். வனிதா, கெயில் தனி வட்டாட்சியர் கே.எஸ். ரவிச்சந்திரன், துணைப் பொது மேலாளர் டி.எஸ். விஸ்வநாதன், மேலாளர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பகுதியில், பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு தலா ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். குழாய் பதிப்பால் நீர்ப் பாசனத்துக்கு எந்தவித சேதமும் இன்றி மாற்று ஏற்பாடுகள் உடனடியாக செய்து கொடுக்கப்படும். குழாய் பதிக்கப்படும் பகுதியைத் தவிர, பிற பகுதிகளில் ஏற்படும் பயிர் சேதத்துக்கும் சேத விவரத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெயில் நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
கூட்டத்தில், வேட்டங்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com