மண்பாண்ட பொருள்கள் விற்பனையில் சரிவு

அதிகரித்துவரும் பித்தளை பானைகளின் மோகத்தால் பாரம்பரிய மண்பாண்ட பொருள்களின் விற்பனை   நிகழாண்டு

அதிகரித்துவரும் பித்தளை பானைகளின் மோகத்தால் பாரம்பரிய மண்பாண்ட பொருள்களின் விற்பனை   நிகழாண்டு சரிவை கண்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். 
மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுக்கு கூடுதல் ருசியும், மணமும் இருந்ததுடன், அதில் சமைக்கப்படும் உணவை உண்டு வந்த நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். மண்பாண்டங்களில் தயார் செய்யப்படும் உணவுகள் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் அப்போதைய குளிரூட்டும் பெட்டியாக இருந்து வந்தது. காலத்தின் வளர்ச்சியால் தற்போது அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் என வசதிகேற்ப பாத்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும் பொங்கல் பண்டிகை போன்ற திருநாள்களில் பண்டைய முறைகளை கடைப்பிடித்து மண்பாண்ட பொருள்களான மண்பானை, சட்டி, மடக்கு போன்றவைகளில் மண் அடுப்பில் வெளிப்புறம் வாசலில் வைத்து பொங்கல் விழா சம்பிரதாயத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 
கூட்டுக் குடும்ப மரபு மறையத் தொடங்கியதிலிருந்து தமிழர்களின் பண்பாடுகளும் குறையத் தொடங்கியுள்ளது. கால மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக நகர் மற்றும் சில கிராமப் பகுதிகளில் பித்தளை பானைகளில் கியாஸ் அடுப்பில் வைத்து  பொங்கலிடும் பழக்கம்  அதிகரித்துள்ளது. இதனால், மண்பாண்ட பொருள்களுக்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால், மண்பாண்ட பொருள்கள் தயார் செய்யும் தொழிலாளர்களும், அதை விற்பனை செய்யும் தொழிலாளர்களும் மாற்றுத் தொழிலுக்குச் செல்கின்றனர்.
இதுபோன்ற, காரணங்களால் நிகழாண்டும் பொங்கல் பானைகள், சட்டிகள் விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மழை விட்டு, விட்டு பெய்ததால் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதிகளவில் மண்பாண்ட பொருள்கள் தயார் செய்யமுடியாத காரணத்தால் கடந்த ஆண்டை விட பொங்கல் பானைகள், சட்டிகளின்  விலை நிகழாண்டு உயர்ந்துள்ளது. ஒரு படி அரிசி பானை விலை ரூ. 50 முதல் ரூ.60 வரையிலும், சட்டி ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. பித்தளை பானைகளுக்கு ஒரு முறை செலவு செய்தால் பல ஆண்டுகள் வைத்துக்கொள்ளலாம் என மக்கள் நினைத்து பித்தளை பாத்திரங்களை புதிதாக வாங்கி பொங்கலிடும் பழக்கம் அதிகரித்துள்ளதால் மண்பாண்ட பொருள்கள் விற்பனை நலிவடைந்து வருகிறது என்றார் 20ஆண்டுகளாக மண்பாண்ட பொருள்கள் விற்பனை செய்யும் செல்வராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com