ஹைட்ரோ கார்பன் திட்டம் கிராமம்தோறும் போராட்டக்குழு அமைக்க முடிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் பொருட்டு, கிராமங்கள்தோறும்


நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் பொருட்டு, கிராமங்கள்தோறும் போராட்டக் குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரியாப்பட்டினம் கிராமத்தில் அனைத்துக் கட்சிகள், வணிகர்கள், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை
நடைபெற்றது.
இதில், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கரியாப்பட்டினம் உள்பட வேதராண்யம் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை எதிர்த்து, கிராமங்கள்தோறும் போராட்டக் குழுக்களை அமைத்து, வரும் 22-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணன் (திமுக) தலைமை வகித்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று
பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, நிலத்தடி நீர், காற்று மாசடைந்து சுமார் ஒரு கோடி மக்கள் வெளியேறும் நிலை உருவாகும். நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்டுள்ள வேதாரண்யம், கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்.
இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகளின் ஆதரவோடு போராட்டங்கள் நடத்த தீர்மானித்திருக்கிறோம். மேலும், ஜன.26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
கரியாப்பட்டினத்தை மையமாக வைத்து ஜன. 22-ஆம் தேதி பிரசாரப் பயணம் நடைபெறுகிறது.
கட்டிமேடு கிராமத்தில் தொடங்கி வாய்மேடு, கரியாப்பட்டினம், புஷ்பவனம், தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். குடியரசு நாளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார் பி.ஆர். பாண்டியன்.
இதில், மாநில வேளாண் திட்டக்குழு உறுப்பினர் கோ. சிவஞானம் (அதிமுக), அமமுக ஒன்றியச் செயலாளர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ஆர். நடராஜன், வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் என். தியாகராஜன், செயலாளர் குமார், நிர்வாகி வெங்கடசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் எம். ஜெயராமன், காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் ராமதாஸ், தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர், நாகை மாவட்டச் செயலாளர் எஸ். ராமதாஸ், ஒன்றியச் செயலாளர்கள் கருணைநாதன், கமலராஜன், திருத்துறைப்பூண்டி பாலமுருகன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com