கஜா புயல்: முத்துப்பேட்டை கடற்கரை பகுதியில் அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் கஜா புயல் தொடர்பாக முன்னேற்பாட்டுப் பணிகளை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் கஜா புயல் தொடர்பாக முன்னேற்பாட்டுப் பணிகளை  தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பேட்டை கிராமத்தில் மீட்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீனவர்களின் படகுகளை அமைச்சர் பார்வையிட்டு, மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், ஜாம்பவானோடை, தில்லைவிளாகம், கற்பகநாதர்குளம் பல்நோக்கு பேரிடர் மையங்கள், செங்காங்காடு நிவாரண முகாம்  ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார். 
தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, வாக்கிடாக்கி மூலம் கஜா புயல் தொடர்பான தகவல்கள் அலுவலர்களுக்கு சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறியது:
நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புயலின்போது மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டால் அதை சமாளிக்க 2 ஆயிரம் மின்கம்பங்களும், 250 கி.மீ. மின்கம்பிகளும், 5 மின்மாற்றிகளும் கையிருப்பில் உள்ளன. மீனவர்களின் படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 அவசர மீட்பு பணிகளுக்காக 25 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை கடலோரப் பகுதியான முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் 43 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். 219 தாழ்வானப் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அங்குள்ளவர்களை தங்கவைக்க 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் 3 மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் அவசர உதவிக்கு மாவட்டத்தில் 8 வட்டாட்சியர் அலுவலகம், 2 வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், 10 ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் ஆகிய பகுதிகளில் 21 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது 04366-226040, 226050, 226080, 226090 ஆகிய தொலைபேசி எண்களில் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியர் பத்மாவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர், வட்டாட்சியர் மகேஷ் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com