கஜா புயல் பாதிப்பு: சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

கஜா புயலின் பாதிப்பு குறித்து சென்னையில், தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (நவ. 19) தமிழக முதல்வர்

கஜா புயலின் பாதிப்பு குறித்து சென்னையில், தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (நவ. 19) தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ். பி. வேலுமணி, ஆர். காமராஜ், ஆர். வி. உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், மாவட்ட கணிப்பு ஆய்வு அலுவலர் மணிவாசன், எரிசக்தி துறை முதன்மைச் செயலர் முகமது நிஜாமுதீன், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா, பொதுப்பணித்துறை  அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகியவற்றில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருமளவு குடிசைகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரையில் முத்துப்பேட்டை, நன்னிலம் ஆகிய பகுதிகளில் கடும் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 203 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளும் முழுவீச்சில் பணியாற்றி வருகிறார்கள். மருத்துவ முகாம்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
5,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. போக்குவரத்து சேவைக்காக சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளை எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், திங்கள்கிழமை (நவ. 19) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கஜா புயலால் வீடு, கால்நடைகள், மரங்கள் ஆகியவற்றை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். சேதத்துக்கு ஏற்றதுபோல், மத்திய அரசிடம் நிதி கோரப்படும். புயல் சேதம் குறித்த முழுமையான அறிக்கையை ஞாயிற்றுக்கிழமைக்குள் தயார் செய்து, மத்திய அரசிடம் முதல்வர் அளிப்பார் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com