கஜா புயல் பாதிப்பு: 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் சீரமைப்புப் பணிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன என்று தமிழக


கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.15லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பால், பிஸ்கெட், போர்வை, பாய், பருப்பு, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தமிழக முதல்வர் அனுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிவாரணப் பொருள்களை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை பெற்றுக்கொண்டு, தெரிவித்தது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 6,426 பணியாளர்கள் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 205 நிவாரண முகாம்களில் 1,12,251 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. வீடு பாதிப்பு, தென்னை மரங்கள் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 5 ஊராட்சி ஒன்றியங்கள் பகுதியாகவும், 5 ஊராட்சி ஒன்றியங்கள் முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பாதிப்பை சரி செய்ய அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறன.
இம்மாவட்டத்தை பொருத்தவரை வேளாண் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அரசின் உத்தரவுப்படி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அனைத்து இடங்களிலும் நூறு நாள் பணி வேண்டும் என்று நினைப்பவர்கள் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்) இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் அத்தியாவசியப் பொருள்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அமைச்சர் ஆர்.காமராஜ்
முதல்வர் அனுப்பிய பொருள்களை பெற்றுக் கொள்ளும்போது மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com