கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர்கள் வழங்கினர்

திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட மாங்குடியில், கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட மாங்குடியில், கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
மாங்குடி பகுதியில் உயிரிழந்த 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவித்தொகையாக ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலை, முழுமையாகவும், பகுதியளவும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளின் உரிமையாளர்கள் 11 பேருக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளுடன் 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய்,  2 ஜோடி வேட்டி, சேலை மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ,  உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர், கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை வான்வழியாக செவ்வாய்க்கிழமை பார்வையிட இருந்தார். இதற்காக சென்னையிலிருந்து காலை 5.45 மணிக்கு  புறப்பட்டு புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சேதங்களைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்துக்கு வந்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல்கூற இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக வான்வழியாக வரும்போது 25 நிமிடங்கள் தரையிறங்க வழியில்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 
   அந்த வகையில், 916 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர் ஆர். காமராஜ். 
நிகழ்ச்சியில், மாவட்டக் கணிப்பாய்வு அலுவலர் மணிவாசன், பால்வளத்துறை ஆணையர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 
மூதாட்டி மயக்கம்
மாங்குடியில், காலை 10 மணிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பயனாளிகள் அனைவரும் மண்டபத்துக்கு வந்திருந்தனர். வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருக்கையில், மண்டபத்தினுள் அனைத்து மின்விசிறிகளும் இயங்கின. இதனால், மூதாட்டி ஒருவருக்கு குளிர் காரணமாக சுகவீனம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com