சீரமைப்புப் பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் ஆர். காமராஜ் 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி, சேத விவர கணக்கெடுப்புப்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி, சேத விவர கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி. சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கஜா புயல் பாதிப்பின் சீரமைப்புப் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஆர். காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆகையால், சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதில், திருவாரூர் மட்டுமன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் 7,500 பேர் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்புப் பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் கண்காணித்து, துரிதப்படுத்தி வருகின்றனர். 
மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் புயலுக்குப் பின்னர் 1.15 லட்சம் பேர் தங்கியிருந்தனர். செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழைக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, உடை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழந்தைகளுக்கான பால், ரொட்டி என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. கிராமப்புறங்களில் மின்விநியோகம் சீரமைய இன்னமும் சில நாள்கள் ஆகலாம். ஏனெனில், அந்த பகுதிகளுக்கு மின்கம்பங்களைக் கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது.
சீரமைப்பு, கணக்கெடுப்பு, நிவாரணப் பொருள்கள் வழங்கல் என அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்தும் வகையில், திருவாரூர் தொகுதிக்கு அமைச்சர் கே.சி. வீரமணி, மன்னார்குடி தொகுதிக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, திருத்துறைப்பூண்டிக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, நன்னிலம் தொகுதிக்கு நாகை தொகுதி எம்பி கே. கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் 2 முதன்மைச் செயலாளர்கள், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் என அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 
அவர்களது குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்து, உடனடியாக சரிசெய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட எந்த பகுதியையும் விட்டுவிடாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரிகள் சென்று வருகின்றனர். சிலர் அரசியலுக்காக மக்களின் போராட்டத்தைத் திசை திருப்புகின்றனர் என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.
இதையடுத்து, மன்னார்குடி நகர பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அமைச்சர்கள் ஆர். காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இலக்கணம்பேட்டை, சுந்தரக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டனம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, முகாம்களில தங்கியிருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி,நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
ஆய்வுக் கூட்டத்தில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கே. பத்மாவதி, வேளாண்துறை இணை இயக்குநர் சந்துரு, பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்டான்லி மைக்கேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com