செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்

DIN | Published: 12th September 2018 06:46 AM

மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மன்னார்குடி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தினமும் காலை, மாலை என சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், பெரும்பாலான வார்டுகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாத நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 இதனால், பாதிக்கப்பட்ட 27-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தலைமையில் நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனர். பின்னர், நகராட்சி பொறியாளர் ஜி.இளங்கோவனை சந்தித்து, தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.  
இதேபோல், 28-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.வடிவேல் என்பவர் தலைமையிலும், 29-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் போஸ் என்பவர் தலைமையிலும் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
 

More from the section

திருவாரூர் மாவட்டத்துக்கு  வருகை தந்த மு.க. அழகிரி: அறிவிப்பு வெளியிடாததால் ஆதரவாளர்கள் ஏமாற்றம்
பணியிடத்தில் பாலியல் தொந்தரவு: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தற்கொலை முயற்சி
உள்ளிக்கோட்டை பகுதியில் செப்டம்பர் 25 மின்தடை
மகாமாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கக் கோரிக்கை
உறவினர் வீட்டுக்கு வந்தவர் மர்மச் சாவு?