சம்பா பயிருக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

சம்பா பயிருக்கு தண்ணீர் கோரி, திருத்துறைப்பூண்டி அருகே 5 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பா பயிருக்கு தண்ணீர் கோரி, திருத்துறைப்பூண்டி அருகே 5 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிளாகம், இடும்பவனம், கற்பகநாதர்குளம், வாடியக்காடு, தொண்டியக்காடு ஆகிய 5 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
இதனால், இக்கிராமங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி இடும்பவனம் மரைக்கா கோரையாறு பாலம் அருகே 5 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஒன்றியச் செயலாளர் இரா.மனோகரன் தலைமை வகித்தார். 
தொண்டியக்காடு கிராம கமிட்டி சார்பில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பூவானம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன், மேல தொண்டியக்காடு விவசாய சங்க பிரதிநிதிகள் சிவானந்தம், சவுந்தரராஜன், தில்லைவிளாகம் விவசாய சங்க பிரதிநிதிகள் திருநாவுக்கரசு, ராமானுஜம், இடும்பாவனம் விவசாய சங்க பிரதிநிதிகள் சீனிவாசன், மணிமாறன், உதயமார்த்தாண்டபுரம் விவசாய சங்க பிரதிநிதி அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் உமாதேவி, திருத்துறைப்பூண்டி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மூர்த்திராஜன், முத்துப்பேட்டை உதவி பொறியாளர் கிளிகண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதன்கிழமை (செப்.19) மாலைக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. 
இந்த போராட்டத்தால் முத்துப்பேட்டை- வேதாரண்யம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com