சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனிப் பிரதோஷத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.


சனிப் பிரதோஷத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில், மூலவர் கல்யாண சுந்தரேசுவரர், மங்களாம்பிகைக்கும், பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீசுவரர் கோயில், வேளுக்குடியில் உள்ள பழைமைவாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோயிலில், சிவபெருமானுக்கும், அதிகாரநந்தி பகவானுக்கும் பால் அபிஷேகமும், மஹா அபிஷேகமும் செய்யப்பட்டது.
கம்பர் தெரு நீலகண்டேசுவரர் கோயில், காக்கையாடி கைலாசநாதர் கோயில், சாத்தனூர் காளகஸ்தீஸ்வரர் கோயில், திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், அதங்குடி விருப்பாட்சிசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் மஞ்சள் பொடி, அரிசி மாவு, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கும், நந்திகேசுவரருக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆஞ்சநேயர் கோயில்களில்...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயர், பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
கூத்தாநல்லூர்- கொரடாச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. வேளுக்குடியில் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கும், மூலவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லெட்சுமி நாராயணன், சீதா, ராமர், லெட்சுமணன், மூலங்குடி ராமபக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோயில்களில் ஆஞ்சநேயருக்கும், பெருமாளுக்கும் மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கார கோலத்தில் அனுமனும், பெருமாளும் அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நீடாமங்கலம் கோயில்களில்...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதி சிவாலயங்களில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு நீடாமங்கலம் காசி விசுவநாதர் கோயிலில் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர், நந்திகேசுவரர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேசுவரர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ நாயகர் பிராகார உலாவும் நடைபெற்றது.
இதேபோல், ராஜேந்திரநல்லூர் அபிதகுஜலாம்பாள் சமேத அபிமுக்தீசுவரர் கோயில், நீடாமங்கலம் கோகமுகேசுவரர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில், நரிக்குடி எமனேசுவரி சமேத எமனேசுவரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வைணவ கோயில்களில்...
 புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் உள்ள வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது.
இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அபயவரதராஜருக்கும், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேத அபயவரதராஜப் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com