திருவாரூர்

1000 நடனக் கலைஞர்களுடன் அரங்கேறிய "சிவபுராணம்' நாட்டியம்

DIN

திருவாரூரில் சாதனை முயற்சியாக 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற சிவபுராணம் நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் அதன் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, 100-ஆவது பிரதோஷக் கூட்டம் மற்றும் 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கெளரவத் தலைவர் ஆர். ஸ்ரீதரன் தலைமை வகித்தார். 
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாம்பாள் சன்னிதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், "ஆன்மிகமானது, வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக் கூறுகிறது. சந்தர்ப்பங்களை வழங்குவதில், ஆன்மிகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. விவேகானந்தருக்கு சிகாகோவில் பேச சந்தர்ப்பம் கிடைத்ததால், அதைப் பயன்படுத்தி கொண்ட அவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது.  
தியாகராஜர் எல்லா இடங்களிலும் இறைவனாக உள்ளார், திருவாரூரில் ராஜாவாக இருக்கிறார் என்று கூறுவார்கள். அவரது திருக்கோயிலில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைத்தவை எல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன்' என்றார். இதைத்தொடர்ந்து, 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவாசக நூலின் முதல் பகுதியான சிவபுராணத்துக்கு அனைத்து நடனக் கலைஞர்களும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்து, நடனம் புரிந்தனர். 
மேலும் இந்த 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற சிவபுராண நடன நிகழ்வானது, டிரடிஷ்னல் புக் ஆப் ரெக்கார்டு, டிபா உலக சாதனைகள் என இரண்டு சாதனைப் புத்தகங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஆன்மிகச் சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி, "ஆன்மிகமே ஆனந்தம்' என்னும் தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் ஜெ. கனகராஜன், ஆலோசனைக் குழுத் தலைவர் எஸ். கார்த்திகேயன், செயலாளர் கே. ரெத்தினவேலு, வணிகர் சங்க கூட்டமைப்பு திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.கே. ராமமூர்த்தி, வேலுடையார் கல்விக் குழுமம் தாளாளர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, விஜயபுரம் வர்த்தக சங்கத் தலைவர் சி.ஏ. பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடன நிகழ்ச்சியை டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா இயக்குநர் கிருத்திகாதேவி ஒருங்கிணைத்தார்.

திருவாரூரில் நாட்டியப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை
நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கிப் பேசியது:
சிதம்பரத்தில்  நடனம் ஆடும் இறைவனுக்கு, ஆடல் வல்லான் எனப் பெயர் உண்டு. அதேபோல் தியாகராஜ சுவாமியை, இருந்தாடும் அழகர் என குமரகுருபரர் கூறுவார். 
திருவாரூரில் நடன மகளிர் எப்போதுமே கெளரவிக்கப்படுவது வழக்கம். தியாகராஜர் சுவாமி  வீதிக்கு வரும்போதெல்லாம், நடன மகளிர் நடனம் ஆடியபடி வருவர். சுவாமி தேருக்கு எழுந்தருளியபிறகு அவர் என்ன ஆடை அணிந்திருக்கிறாரோ, அதே போல நாட்டிய மகளிருக்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு, கெளரவம் செய்யப்படுவர். ஒரு காலத்தில் வீதிகளில் ஆடப்பட்டு வந்த நடனம், தற்போது தெய்வீகக்   கலையாக மாறிவிட்டது. 
திருவாரூர், இசைக்கென மும்மூர்த்திகளை கொடுத்தது. திருவாரூரில் பிறந்த தியாகராஜரின் சமாதி திருவையாறில் உள்ளது. அங்கு இசைக்கல்லூரி உள்ளது. நடனத்துக்கு கெளரவத்தை அளித்த திருவாரூரில் தியாகராஜர் பெயரில் நாட்டியத்துக்கென பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். விரைவிலேயே அந்த பல்கலைக்கழகம் உருவாகி,  ஏராளமான நாட்டியக் கலைஞர்களை கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT