ரூ. 2000 உதவித் தொகையை விடுபடாமல் வழங்கக் கோரிக்கை

அமைப்புச்சாரா மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கும் 

அமைப்புச்சாரா மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கும் விடுபடாமல் தலா ரூ. 2000 உதவித்தொகை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழக விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ. பாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: 
வறட்சியால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா .முத்தரசன் தலைமையில் சங்க நிர்வாகிகள், தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தியப் பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போதைக்கு எவ்வித அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மற்றும் நகரப்புற ஏழைகள் 60 லட்சம் பேருக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மக்கள் நிலை ஆய்வுக் கணக்கெடுப்பு மூலம் ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களின் தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும் நகரப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு பயன்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 வறுமைக்கோடு பட்டியல் என்பது 2003-இல் எடுக்கப்பட்டது. அதில் வசதி படைத்தவர்களின் குடும்பங்கள் இடம் பெற்றும், ஏழை எளிய குடும்பங்கள் விடுபட்டும் உள்ளன. 2011-இல் பட்டியல் சரிபார்க்கப்பட்டும், இந்நிலை தொடர்கிறது. மேலும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது .வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் இவர்களது பெயர்கள் விடுபட்டுள்ளது. 
எனவே, விடுபட்டுள்ள குடும்பங்களின் பெயர்களையும் இணைத்து தமிழக அரசு அறிவித்துள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். இது தேர்தலுக்கான அறிவிப்பாக இல்லாமல், இத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பண்டிகை கால உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com