நெல் கொள்முதல் செய்வதை அதிகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அளவை அதிகப்படுத்தி விவசாயிகளின்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அளவை அதிகப்படுத்தி விவசாயிகளின் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என நன்னிலம் தாலுகா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நெல் கொள்முதலில் திருவாரூர் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இம்மாவட்டத்தில் நடைபெறும் நெல் கொள்முதலில் கணிசமான அளவு நன்னிலம் வட்டத்தில் உள்ளது. நன்னிலம், பேரளம், முடிகொண்டான், ஸ்ரீவாஞ்சியம், கொல்லுமாங்குடி, அச்சுதமங்கலம், மாப்பிள்ளைகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்துள்ளனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெல் மூட்டைகளை மட்டுமே  கொள்முதல் செய்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளை கொண்டு வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துவிட்டு விவசாயிகள் பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் சில நாள்களாக ஸ்ரீ முஷ்ணம், விருத்தாச்சலம் போன்ற பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. அதேபோன்ற சூழ்நிலை நன்னிலம் பகுதியில் ஏற்பட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.  
இதற்கிடையில், நெல் விற்பனை செய்யப்பட்டு பணம் பெறுவதற்கு ஒரு சில நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கே பல நாள்ட்கள் காத்திருக்க  வேண்டி இருக்கிறது. அத்துடன், இரவு பகலாக அந்த நெல்மூட்டைகளை காவல் காக்க வேண்டிய நிலையும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக மழை வந்துவிட்டால் நெல்மூட்டைகளை நனையாமல் பாதுகாக்கக் கூடிய எந்தவித வசதிகளும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இல்லை. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை தினசரி அடிப்படையில் அன்றைக்கே  கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒட்டுமொத்த விவசாயிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக, கருத்துகளை அறிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com