"பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு முன்னெடுக்காவிட்டால் போராட்டத்தை தவிர்க்க முடியாது'

பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு முன்னெடுக்காவிட்டால் தொடர்

பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு முன்னெடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் என்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலச் செயலரும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டக் குழு தமிழ் மாநிலத் தலைவருமான கே. நடராஜன்   தெரிவித்தார். 
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மத்திய அரசும், தொலைத் தொடர்பு இலாக்காவும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. எஸ்மா என்றழைக்கப்படும் அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டம் தேவைப்பட்டால் பயன்படுத்தப்படும். 
வேலை இல்லை சம்பளம் இல்லை மட்டுமல்ல (எப் ஆர் 17ஏ) என்ற விதியின்கீழ் ஊழியர்களுக்கு சேவை முறிவு தரப்படும் என்கின்ற எச்சரிக்கைகளையெல்லாம் புறம்தள்ளி ஒட்டு மொத்தமாக பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் 1.76 லட்சம் அதிகாரிகள், ஊழியர்கள் இந்தியா முழுவதும் பிப்ரவரி 18 ,19, 20 மூன்று நாள்கள் 72 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்தை  நடத்தி முடித்துள்ளனர்.
அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்டின் பிஎஸ்என்எல் புத்தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு பாதகமான அம்சங்களை எதிர்க்கும் போராட்டமாக அமைந்தது. 50 வயது முதல் விருப்ப ஓய்வு திட்டம், ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தல், பிஎஸ்என்எல்-ஐ பல கூறுகளாக, தனி டவர் கார்ப்பரேஷன், கண்ணாடி இழை கார்ப்பரேஷன் என்று பிரித்தலை எதிர்த்த போராட்டமாகவும் இது நடைபெற்றது.
பிஎஸ்என்எல்-ஐ மூடிவிடுவது குறித்து அரசு பரிசீலிக்கிறது எனும் செய்தி ஊடகங்களில் பரப்பப்பட்டது. அரசின் அடக்கு முறைகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடி அரசின் கொள்கை முடிவை தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றுள்ளோம். நேரடியான பேச்சுவார்த்தைக்கு, போராடும் சங்கங்களை அழைக்காமல் அரசு பாராமுகமாக இருந்தது  ஆரோக்கியமானதல்ல. தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி  நிலைகுலைந்து போயிருக்கும் புல்வாமா பகுதியில் (விஎஸ்ஏடி) தொழில்நுட்பத்தின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம்தான் தொலைத்தொடர்பு சேவையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தந்துள்ளது. 
இந்திய அரசாங்கத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை அமைப்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் தொலைத்தொடர்பு சேவையை புனரமைக்கும் பணியை வேறு எந்த தனியார் தொலைபேசி நிறுவனத்திடமும் வழங்காததற்கு காரணம் என்ன ?
தேசத்தின் பாதுகாப்பு எனும் அம்சம் தான். எனவே, பிஎஸ்என்எல் என்ற அரசு பொதுத் துறை, தனியாரின் தலையீடு இன்றி செயல்பட அரசு உதவவேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டின் நவரத்தினங்கள் என்று அறிவித்து பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கிய பண்டித. ஜவாஹர்லால் நேருவின் வாரிசுகளாகிய காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி  பொதுத் துறையை பாதுகாப்பதற்கு உரத்த குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தம் ஊழியர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆழமாக உள்ளது. ஊழியர்கள், அதிகாரிகளின் கோரிக்கைகளை அரசு முன்னெடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும். பிஎஸ்என்எல்-ஐ காக்கும் போராட்டம் இந்திய இறையாண்மையை காக்கும்  போராட்டமாகும் என்றார் கே. நடராஜன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com