"மக்களை ஏழைகளாக்கிய கட்சிகளைத் தூக்கி எறிய வேண்டும்'

மக்களை ஏழைகளாக மாற்றிய கட்சிகளை தூக்கி எறிய வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்களை ஏழைகளாக மாற்றிய கட்சிகளை தூக்கி எறிய வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திருவாரூர் தெற்குவீதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மய்யக் கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மேலும் அவர் பேசியது: திருவாரூர் பல பெரும் கலைஞர்களை, நல்ல தலைவர்களை கொடுத்துள்ளது. அதேபோல் வாரிசு அரசியல், குடும்ப அரசியலையும் கொடுத்து, தமிழகத்தை கெடுத்திருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்ற தமிழக மக்களின் எண்ணத்தை, நிறைவேற்றவே திருவாரூரில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. எனக்கும் குடும்பம் உள்ளது. அது மக்களாகிய நீங்களே. இதில் 8 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மக்கள் திலகமும் இதேபோல் இருந்தவர் என சிலர் கூறலாம். ஆனால், அவரின் இலையை இரண்டாக பிரித்து  சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இன்று மகா கூட்டணி என்று கூறுகின்றனர். மெகா, மகா கூட்டணி என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு தலைவரின் பிறந்தநாளுக்கான போஸ்டர்கள் இங்கு அதிகம் ஒட்டப்பட்டுள்ளன. உண்மையில் அவர் இறந்தநாள் எது என்று தெரியுமா, இன்னமும் அவரின் இறப்பு மர்மமாகவே உள்ளது. 
மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள். மக்கள் சில தவறுகள் செய்திருக்கலாம். அதற்காக மக்களை முட்டாள்கள் என எண்ணுவதா?  அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. மக்களும் உணர்ந்து விட்டனர். நானும் உணர்ந்து விட்டேன். மக்களின் உணர்வுதான் என் உணர்வு. மக்களின் உணர்வு எங்களின் உணர்வாகி விட்டதனால் பொங்கி யெழுந்த கட்சி இது. ஓட்டுக்கு காசு வாங்கவில்லை என்று மக்களாகிய நீங்கள் கூற வேண்டும். எனவே, மக்களின் தேவைக்காக மக்களுக்கு பணம் கொடுங்கள் என்றால், எங்களிடம் எதுவுமில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பொங்கலுக்கு பணம் தர எங்கிருந்து வந்தது ரூ. 2 ஆயிரம் கோடி.
60 லட்சம் தமிழ் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறுகின்றனர். அவர்களை ஏழைகளாக்க, குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாவது ஆகியிருக்கும். எனவே, மக்களை ஏழைகளாக மாற்றிய கட்சிகளை தூக்கி யெறிய வேண்டும். எங்கள் மேடைகள் உங்களுக்கு புதிதாக இருக்கும். வழக்கமான அரசியல் கூட்டங்களாக இருக்காது. மக்களை சந்திக்கும் வகையில், உரையாடல் வகையில் அமைந்திருக்கும். ஏனெனில் இது எனது குடும்பம். நீங்கள் புதிய தமிழகத்தின் பங்குதாரர்கள் என நம்புகிறேன். துணிச்சலாக பேசக் காரணம் நாங்கள் நேர்மையானவர்கள். ஏனெனில் நாட்டின் அரசியலில் தமிழனுக்கு சம்பந்தம் இருக்க வேண்டும். நாட்டின் பிரதமர் யார் என முடிவு செய்வதில் பெரும் பங்கு தமிழகத்துக்கு இருக்க வேண்டும். அதை கேட்பதற்காக, ஊர்ஜிதப்படுத்துவதற்கான தருணமே இந்த மக்களவைத் தேர்தல். ஆகவே, இது நமக்கு சம்பந்தமில்லை என எண்ணாதீர்கள். பிரதமர் யார் என்று சொல்ல நமக்கு உரிமையும், அருகதையும் உள்ளது.
குடும்ப அரசியல் போக வேண்டும் என்பதே இப்போதைய தேவை. கட்சிகள் உருவானது அந்த காலத்தின் தேவை. அவை அகற்றப்பட வேண்டியது இந்த காலத்தின் தேவை. இதுவரையிலும் ஓட்டுப்போடாமல் இருந்தவர்கள், இனிமேலாவது வெளியில் வந்து ஓட்டு போடுங்கள். இனி எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுடன். இனி நான் உங்கள் சொத்து. இதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  நேர்மையானவர்களால் உருவான கட்சி இது. நேர்மையானவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றே அர்த்தம். 
 அரசுகள் சுரண்டி எடுத்து சென்ற கஜானாவை நிரப்புவோர்கள் மக்களே. பல ஆயிரம் கோடி பாக்கி வைத்தவர்கள் அல்ல. எனவே, கஜானாவை புதுப்பிக்கும் மக்களிடம் பணம் வாங்கி எனது கட்சி நடக்கும்.
மாற்றத்தை கொண்டு வர மக்களால் முடியும். மக்களே முதலாளிகள். அரசியல்வாதிகள் வேலை செய்வோர். எனவே மக்கள் அரசியலுக்கு வரவேண்டும். எல்லோரும் அரசியலுக்கு வந்ததாலேயே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே எல்லோரும் எல்லா நேரத்திலும் விழித்திருக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து என்பது நான் கண்டறியவில்லை. காந்தியும் கண்டறியவில்லை. முன்பே இருந்தது. அதை நிறைவேற்றாமல் பொய் கணக்கு எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அதை நான் நினைவுபடுத்தினேன். அவ்வளவே. கதையின் நாயகன்தான் கதாநாயகனாக இருக்க முடியும். கதையடித்துக் கொண்டிருப்பவர்கள் எப்படி கதாநாயகன் ஆக முடியும்.  
அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஏற்கனவே டெல்டா பகுதிகளை பசுமை வேளாண்மை பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தோம். அதன்படி, வேளாண்மை மண்டலமாக இந்த பகுதி அறிவிக்கப்பட வேண்டும். கஜா புயல் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. விவசாய முறைகள் மாற வேண்டும். நீர் விரயம் செய்யாதிருக்க, புதிய முறையிலான சேமிப்பு திட்டங்கள் வேண்டும். தமிழக மக்களின் நலனே எங்கள் கொள்கை. அதுதான் எங்கள் இலக்கு. அதை நோக்கி நகர்கிறோம். இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை தமிழகத்துக்கும் உள்ளது என்றார். 
நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய பொருப்பாளர்கள் சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கிராம சபை நாயகர்...
கடந்த சில நாள்களாக கிராம சபை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்து வரும் வேளையில், கிராம சபை நாயகர் என்ற தலைப்பில் ஏராளமான பேனர்கள் திருவாரூரில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், மேடை அளவு முன்புறம் சிறிது நீட்டி அமைக்கப்பட்டிருந்தது.
இதனால், கமல்ஹாசன் மேடையில் நடந்தபடியே பேசினார். கமல்ஹாசன் மேடைக்கு வந்தபோது இருந்த கூட்டம், அவரை பார்த்த திருப்தியில், பேசத் தொடங்கியதும் கலையத் தொடங்கியது. 8.30-க்கு பேசத் தொடங்கியவர் சரியாக 30 நிமிடங்கள் வரை பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com