விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

விவசாய நிலங்களைப் பாலைவனமாக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

விவசாய நிலங்களைப் பாலைவனமாக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பேரளம் ஜெ. நாவலனின் 8-ஆம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டம் பேரளம் கடைவீதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்துகொண்டு பேசியது: ஹைட்ரோகார்பன், ஷேல், மீத்தேன் எடுப்பதாகக் கூறி விவசாய நிலங்களைப் பாலைவனமாக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டும் மத்திய அரசு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்காமல், ஒட்டுமொத்த விவசாயிகளையும் அழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 
இங்கே தமிழகத்தில் செயல்படுகின்ற அரசு,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள்  போராடினால் அந்த போராட்டத்தை அடக்கவும், டாஸ்மாக் கடைகளில் வியாபாரத்தைப் பெருக்கவும், எப்படி தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதிலேயும் தனது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் நரேந்திர மோடி, இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்றவுடன் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு வர முயற்சி செய்கிறார். தேர்தல் வந்தால்தான் அவருக்கு தமிழகம் பற்றிய நினைவே வருகிறது. மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், பழனிவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் குமாரராஜா, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கலியபெருமாள், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், 50 இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com