ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டவட்டம்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ஹைட்ரோ கார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய எரிசக்தித் துறை இயக்குநரகம், அனுமதி வழங்குவதற்கான இரண்டாவது சுற்றுப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 14 வட்டாரங்களில் கஜா புயல் பாதித்த காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியும் ஒன்றாகும். 
அதன்படி திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் தொடங்கி நாகை மாவட்டம் திருக்குவளை, கட்டிமேடு, வாய்மேடு, கரியாப்பட்டினம், புஷ்பவனம், கோவில்பத்து, தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் 244 சதுர கி.மீ. பரப்பளவுக்கு நெல் விளையும் நிலப்பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் ஏற்கெனவே தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள இப்பகுதி மக்களுக்கு, இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுதவிர, 690 சதுர கி.மீ. பரப்பளவில் தடை  விதிக்கப்பட்ட மீத்தேன் திட்டமும் நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால், காவிரி பாசனப் பகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை முழுமையாக இழப்பார்கள் என்பது உறுதி.
இதனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்திட்டம் அறிவிக்கப்பட்ட மறுநாளே திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தொடர்ந்து, பொங்கல் பண்டிகை தினத்தன்று (ஜன. 15)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில் திருக்காரவாசல் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், திருக்காரவாசலிலிருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சைக்கிள் பேரணி திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஜன.18- ஆம் தேதி நடைபெற்றது.
 இந்த திட்டத்தை திரும்பப்பெறும் வரை ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  தமிழக அரசு மௌனத்தை களைத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்றார் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com