காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி தொடரும்: ராம் மாதவ்

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் வரை ஆளுநர் ஆட்சி தொடரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் வரை ஆளுநர் ஆட்சி தொடரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் அமலில் உள்ள ஆளுநர் ஆட்சி, அடுத்த மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அந்த மாநில சட்டப்படி, ஆளுநர் ஆட்சியை நீட்டிக்க முடியாது. எனவே, ஆளுநர் ஆட்சிக்கு முடிவுக்கு வந்தவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்யும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினரை கெளரவிக்கும் நிகழ்ச்சி, கதுவாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் மாதவ், ஆளுநர் ஆட்சி குறித்து கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தனது நிர்வாகத் திறமையால், நல்ல சூழலை உருவாக்கியுள்ளார். கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படுகிறது. மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.
மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி சிறிது காலத்துக்கு தொடர வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. ஆளுநர் ஆட்சி அடுத்த மாதம் வரை தொடரும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதன் பிறகு முடிவு செய்யப்படும்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 35-ஏ-வை பாதுகாப்பதற்காக, உள்ளாட்சித் தேர்தலை சில அரசியல் கட்சிகள் (தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி) புறக்கணித்தன. 
அந்தக் கட்சிகள்தான் தற்போது சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
ஒரு வேளை உடனடியாக பேரவைத் தேர்தல் நடைபெற்றால், அந்தக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா எனத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் மாநிலத்தின் பிரதான கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். 
தேர்தலில் போட்டியிட்டால், சட்டப் பிரிவு 35-ஏவை பாதுகாப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் என்னவாயிற்று என்பதை அக்கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும். எனினும், அக்கட்சிகள் தங்களுடைய கபட நாடகத்தை கைவிட்டு, பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் அதை  பாஜக வரவேற்கும் என்று ராம் மாதவ் கூறினார்.
ஒமர் வலியுறுத்தல்: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் அரசு அமைப்பது குறித்து ராம் மாதவ் தெளிவுபடுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com