மத்திய, தில்லி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: சட்டப்பேரவைக் குழுக்களின் உரிமை மீறல் நடவடிக்கை விவகாரம்

சட்டப்பேரவைக் குழுக்களின் உரிமை மீறல் நடவடிக்கைகளை ரத்துசெய்ய கோரி தில்லி தலைமைச் செயலர் தாக்கல்

சட்டப்பேரவைக் குழுக்களின் உரிமை மீறல் நடவடிக்கைகளை ரத்துசெய்ய கோரி தில்லி தலைமைச் செயலர் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தில்லி நாகரிக் சஹாரி வங்கி தொடர்பான பிரச்னைகள் குறித்து கூட்டுறவுத் துறை அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்பதால், தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜே.பி.சிங், தில்லி நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுர்பீர் சிங் ஆகியோர் ஆஜராக வேண்டும்' என்று தில்லி சட்டப்பேரவை கேள்விகள் மற்றும் குறிப்புதவிக் குழு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இக்குழு முன் ஆஜராகாததால், மூவருக்கும் பேரவை விதிமீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவரால் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, அந்த மூன்று அதிகாரிகளும் பேரவைக் குழுக்கள் முன் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, தங்கள் மீது தில்லி அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளும் தில்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், பேரவைக் குழு முன் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு அமர்வு முன் கடந்த ஜூலை 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி சட்டப்பேரவைத் தலைவர், இரண்டு பேரவை குழுக்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "உயர்நீதிமன்ற உத்தரவை தங்களுக்குச் சாதகமாக வைத்து மூன்று அதிகாரிகளும் பேரவைக் குழுக்கள் முன் ஆஜராவதும் இல்லை; கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும் இல்லை' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி விபு பக்ரு பிறப்பித்த உத்தரவில், "தில்லி சட்டப்பேரவைக் குழுக்கள் முன் மூன்று அதிகாரிகளும் ஆஜராக வேண்டும். இது நீதிமன்ற உத்தரவாகும். தவறினால், நீதிமன்றமே அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை பேரவைக் குழுக்கள், இந்த மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூன்று அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்கள் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு தில்லி உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கம் கோரும் மனு நீதிபதி விபு பக்ரு அமர்வு முன் கடந்த ஜூலை 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, " தில்லி சட்டப்பேரவைக் குழுக்கள் முன் மூன்று அதிகாரிகளும் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் எவ்வித தண்டனையையும் அமலாக்க முடியாது என கடந்த ஜூலை 13-ஆம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, தில்லி சட்டப்பேரவைக் குழுவின் தண்டனையிலிருந்து போதுமான பாதுகாப்புத் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராகத் தில்லி சட்டப்பேரவையின் கேள்விகள் மற்றும் குறிப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் உரிமை மீறல் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான மனு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதி, "தில்லி சட்டப்பேரவையின் கேள்விகள் மற்றும் குறிப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் உரிமை மீறல் நடவடிக்கைக்கு ரத்து செய்ய கோரி தில்லி தலைமைச் செயலர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக மத்திய அரசு, தில்லி அரசு பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். 
ஆம் ஆத்மி: இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: சட்டப்பேரவையின் கேள்விகள் மற்றும் குறிப்புக் குழு முன் ஆஜராக நான்கு வாய்ப்புகள் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷுக்கு வழங்கப்பட்டும் ஆஜராகவில்லை. நெறிமுறைக் குழு முன்பும் இரு முறை ஆஜராகவில்லை. 
வக்ஃபு வாரியம் ஊழல் தொடர்பாகவும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, உரிமை மீறல் நடவடிக்கையாகப் 
பரீசிலிக்கப்பட்டு தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக தடை விதிக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவருக்கு எவ்வித இடைக்கால நிவாரணமும் கிடைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com