தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சட்டம்: விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்

தில்லி தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைக் தடுக்க மத்திய அரசின் மருத்துவ

தில்லி தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைக் தடுக்க மத்திய அரசின் மருத்துவ நடைமுறைகள் சட்டத்தை தில்லி அரசு கொண்டு வர வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: தில்லியில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மருத்துவத்தில் அலட்சியப் போக்கும் நிலவுகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க தில்லி அரசு தவறிவிட்டது. 
இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் நிலவும் ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ நடைமுறைகள் சட்டத்தை மத்திய அரசு 2016- ஆம் ஆண்டு இயற்றியது. 
தில்லியின் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகியவற்றில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தில்லி அரசு இச்சட்டத்தை இதுவரை அமல்படுத்தவில்லை. 
இதனால், தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. மேலும், இம்மருத்துவமனைகளில் மருத்துவ அலட்சியமும் நிலவு
கிறது.
தனியார் மருத்துவமனைகளைக் ஒழுங்குபடுத்தும் பொறுப்பிலுள்ள தில்லி அரசு இக்கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. 
தில்லியில் இப்போது புழக்கத்தில் உள்ள தில்லி நர்சிங் ஹோம் பதிவுச் சட்டம் 1953-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மிகப் பழைமையான இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. 
எனவே, மத்திய அரசின் மருத்துவ நடைமுறைகள் சட்டத்தை தில்லியில் அமல்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளையை தில்லி அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com