பெண் ஆடை வடிவமைப்பாளர், வீட்டுப் பணியாளர் கொலை: ஊதியம் வழங்காததால் கொலை செய்ததாக 3 பேர் சரண்

வசந்த் குஞ்ச் என்கிளேவில் வியாழக்கிழமை அதிகாலையில் பெண் ஆடை வடிவமைப்பாளர் மாயா லக்கானி (53),

வசந்த் குஞ்ச் என்கிளேவில் வியாழக்கிழமை அதிகாலையில் பெண் ஆடை வடிவமைப்பாளர் மாயா லக்கானி (53), வீட்டுப் பணியாளர் பகதூர் (50) ஆகிய இருவரை கொலை செய்ததாக மாயா லக்கானியிடம் பணியாற்றிய தையல்காரர் உள்பட 3 பேர் போலீஸில் சரணடைந்தனர்.
நிலுவை ஊதியத்தை வழங்காத காரணத்தால், மாயா லக்கானியைக் கொலை செய்ததாகவும், தங்களது குடும்பத்தினரை போலீஸார் துன்புறுத்துவார்கள் என்பதால் சரணடைந்ததாக 3 பேரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: தெற்கு தில்லி, வசந்த் குஞ்ச் என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் மாயா லக்கானி (53). இவர் அப்பகுதியில் உள்ள கிரீன் பார்க் பகுதியில் "துல்ஸி கிரியேசன்ஸ்' எனும் பெயரில் அழகுசாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இவருடைய வீட்டில் பகதூர் என்பவர் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைசெய்து வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை இருவரும் வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தனர். இருவரையும் சிலர் புதன்கிழமை இரவு கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மாயா லக்கானியின் கடையில் மாஸ்டர் தையல்காரராக வேலை செய்த ராகுல் அன்வர் (24), அவருடைய உறவினர் ரஹ்மத் (24), இவருடைய நண்பர் வாசிம் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
முன்னதாக, வியாழக்கிழமை காலை 2.45 மணிக்கு வசந்த் குஞ்ச் (தெற்கு) காவல் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட மூன்று பேரும் சென்றனர். தாங்கள் மூவரும் சேர்ந்து மாயா லக்கானி, பகதூர் ஆகிய இருவரையும் கொலை செய்ததாகச் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். விசாரணையின்போது, மூவரும் சேர்ந்து மாயா லக்கானியைக் கொலை செய்ய சதித் திட்டமிட்டதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு வீட்டில் இருந்து நகைகள் உள்ளிட்ட விலைமதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்ததாகவும் கூறினர். 
மாயா லக்கானியில் கடையில் சில காலமாக வேலை செய்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக தனக்குரிய ஊதியத்தை தராமல் லக்கானி அவ்வப்போது தவணை முறையில் கொடுத்து வந்ததாகவும் போலீஸாரிடம் அன்வர் கூறினார். இந்த கொலை தொடர்பாக தங்களது குடும்த்தினரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து தொல்லை அளிப்பார்கள் என்பதால் சரணடைந்ததாக அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மேற்கு காவல் துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவித்தார். மேலும், குற்றச் சம்பவம் நிகழ்ந்த பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், கொலையான இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயரதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com